பைனலுக்கு முன்னேறினார் ஸ்வெரேவ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிசில்
பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு பைனலுக்கு ஜெர்மனியின் ஸ்வெரேவ் முன்னேறினார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், செக்குடியரசின் ஜாகுப் மென்சிக் மோதினர். முதல் செட்டை 7-5 என போராடி கைப்பற்றிய ஸ்வெரேவ், இரண்டாவது செட்டை 6-2 என தன்வசப்படுத்தினார். பின் எழுச்சி கண்ட மென்சிக், மூன்றாவது செட்டை 6-3 என வென்றார். நான்காவது செட்டில் துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய ஸ்வெரேவ் 6-3 என தட்டிச் சென்றார்.
மூன்று மணி நேரம், ஒரு நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில் ஸ்வெரேவ் 7-5, 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் 2வது முறையாக (2024, 2026) பைனலுக்கு முன்னேறினார். கடந்த 2024ல் நடந்த பைனலில் ஸ்வெரேவ், ஸ்பெயினின் அல்காரசிடம் தோல்வியடைந்தார். தவிர இது, இவரது 4வது கிராண்ட்ஸ்லாம் பைனல். ஏற்கனவே யு.எஸ்., ஓபன் (2020), ஆஸ்திரேலிய ஓபனில் (2025) பைனல் வரை சென்றிருந்தார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இன்று, உலகின் 'நம்பர்-8' ரஷ்யாவின் மிர்ரா ஆன்ட்ரீவா 19, டபிள்யு.டி.ஏ., தரவரிசையில் 114வது இடத்தில் உள்ள போலந்தின் மாஜா சவாலின்ஸ்கா 24, மோதுகின்றனர்.