கண் இமைக்கும் நேரம் போதும் எல்லாம் மாறுமே...

வான்கூவர்: உலக கோப்பை கால்பந்து அரங்கில் முதல் வெற்றி பெற்று சாதனை படைத்த கனடா அணிக்கு, மத்திய கள வீரர் இஸ்மாயில் கோனேவுக்கு ஏற்பட்ட காயம் வேதனையாக அமைந்துள்ளது.
ஆட்டத்தின் 51வது நிமிடத்தில் கத்தார் வீரர் அசிம் மடிபோ பின்புறத்தில் இருந்து முரட்டுத்தனமாக மடக்கியதில், இஸ்மாயில் கோனேவின் 24, இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த இவர், மைதானத்தில் விழுந்தார். சிகிச்சைக்காக 'ஸ்டிரெச்சர்' மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பரிசோதனையில் இவரது இடது காலின் கீழ் பகுதியில் இருக்கும் இரண்டு எலும்புகளும் முறிந்தன. இதையடுத்து உடனடியாக 'ஆப்பரேஷன்' செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர். இதற்கு, கால் எலும்புகளை நேராக வைக்க, முழங்கால் வழியாக எலும்பின் உட்பகுதிக்குள், 'டைட்டானியம் ராடு, பிளேட், ஸ்குரூ' பொறுத்துவர். குணமடைய 4-9 மாதம் தேவைப்படலாம். இதனால் எஞ்சிய போட்டிகளில் கோனே பங்கேற்க இயலாது. கண் இமைக்கும் நேரத்தில் ஏற்பட்ட காயம், இவரது உலக கோப்பை கனவை தகர்த்துள்ளது. கோனே காயத்தின் தீவிரம் அறிந்த கனடா வீரர்கள் ஆத்திரமடைந்தனர். கத்தார் வீரர்களுடன் மோதிக் கொண்டனர். கோனே இல்லாதது, வரும் போட்டிகளில் கனடா அணிக்கு பின்னடைவாக அமையலாம்.
கனடா பயிற்சியாளர் ஜெஸ்ஸி மார்ஷ் கூறுகையில்,''மடிபோ மோதிய தருணத்தில் கோனேவின் கால் எலும்பு முறிந்த சத்தம் கேட்க முடிந்தது. அவரது கால் பகுதி தனியாக தொங்கியது போல இருந்தது. எங்களது இதயங்கள் நொறுங்கிவிட்டன. இவரை அதிகம் 'மிஸ்' செய்வோம்,''என்றார்.

ரசிகர்கள் கார் மீது துப்பாக்கிச்சூடு
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சகஜம். கன்சாஸ் நகரில் கால்பந்து போட்டியை காண காரில் சென்ற அர்ஜென்டினா ரசிகர்கள் மீது அடையாளம் தெரியாத நபர் சுட்டதில், கார் டிரைவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. வேறு ஒருவர் மரணம் அடைந்தார். 4 பேர் காயம் அடைந்தனர். இது பற்றி அர்ஜென்டினா ரசிகர் ஒருவர் கூறுகையில்,''கன்சாஸ் நகரில் அமைந்துள்ள ஏரோஹெட் கால்பந்து மைதானத்திற்கு செல்லும் சாலை உட்பட 5 இடங்களில் துப்பாக்கிச்சூடு நடந்தது. எங்களது காருக்கு அருகே இன்னொரு கார் உரசிச் சென்றது. அதில் இருந்த நபர் இரு முறை சுட்டத்தில் கார் டிவைர் காயம் அடைந்தார்,''என்றார். 22 வயதான மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மெஸ்ஸி சோகம் ஏன்...
மெஸ்ஸியின் தந்தை ஜார்ஜ், 68, அர்ஜென்டினா மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெறுகிறார். இந்த சோகத்தை கடந்து அல்ஜீரியாவுக்கு எதிராக 'ஹாட்ரிக்' கோல் அடித்து அர்ஜென்டினாவுக்கு வெற்றி தேடித் தந்தார் மெஸ்ஸி. அப்போது கூறுகையில்,''கடினமான சூழ்நிலையில் உள்ளேன். முதல் கோல் அடித்ததும் அழுதேன். இதற்கு கால்பந்து காரணமல்ல,'' என்றார். தனிப்பட்ட விஷயத்தை பகிர்ந்து கொள்ளாத நிலையில், அர்ஜென்டினாவின் லுாஜு 'டிவி' மெஸ்ஸியின் தந்தை இறந்துவிட்டதாக தவறான செய்தி வெளியிட்டது. பின் 'டிவி' நிறுவனம் மன்னிப்பு கேட்டது.
மெஸ்ஸி குடும்பத்தினர் வெளியிட்ட செய்தியில்,'ஜார்ஜ் உடல்நிலை தேறி வருகிறார். மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். ஒருவரின் உடல்நிலை பற்றி வதந்தி பரப்புவது 'மீடியா'வின் பொறுப்பற்ற செயல். அனைவரும் மனிதநேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement