கால்பந்து நடுவருக்கு ஊறுகாய்
சியாட்டில்: அமெரிக்காவின் சியாட்டிலுள்ள லுமென் பீல்டு மைதானத்தில் ‛டி' பிரிவு லீக் போட்டி நடந்தது. இதில் அமெரிக்க அணி, 2--0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
இப்போட்டியில் மைதானத்தில் நடுவராக இருந்த பெலிக்ஸ் ஜாயர் (ஜெர்மனி), வெயிலின் கொடுமை தாங்க முடியாமல், திடீரென ஏற்பட்ட தசைப் பிடிப்பால் கீழே விழுந்தார். மீண்டும் எழுந்திருக்க முடியாமல் தவித்தார்.
உடனடியாக அங்கு வந்த அமெரிக்க, ஆஸ்திேரேலிய அணி வீரர்கள், நடுவரின் கால்களை பிடித்து, இழுத்து, வலியை குறைக்க உதவினர். அப்போது உள்ளே வந்த பெண் நடுவர் ஒருவர் சிறிய பாட்டிலில் ஏதோ குடிக்கக் கொடுத்தார்.
இதன் பின் வழக்கம் போல எழுந்து, மீண்டும் போட்டியை தொடர்ந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள், ‛நடுவருக்கு அப்படி என்ன கொடுக்கப்பட்டது, அந்த மர்ம பானம் என்ன,' என சமூக வலைதளங்களில் மாறி மாறி கேள்வி கேட்கத் துவங்கினர்.
நடுவரை உடனடியாக குணப்படுத்த ஊறுகாய் சாறு தான் உதவியது,' என இணையதளம் ஒன்றில் செய்தி வெளியானது. இது, 60 வினாடிக்கும் குறைவான நேரத்தில் நமது தசைப்பிடிப்பை நீக்குகிறது. இதிலுள்ள வினிகர், தொண்டையின் பின்புறத்தில் உள்ள நரம்புகளில், ஒருவித அனிச்சை உணர்ச்சியை துாண்டுகிறது. இதனால், தவறாக செயல்பட்டு நமது தசைகளை சுருங்கச் செய்த நரம்புகளை அமைதிப்படுத்துமாறு, மூளைக்கு ‛சிக்னல்' கொடுக்கிறது.
இதனால் தான் நடுவர் உடனடியாக எழுந்து ஓடத் துவங்கிவிட்டார்.