வலிகளை கடந்த கோல்: ஈராக் கேப்டன் அபாரம்

பாஸ்டன்: ஈராக் அணி கேப்டன் ஐமென் ஹுசைன் வாழ்க்கையில் பல துயரங்களை கடந்து, உலக கோப்பையில் தனது முதல் கோல் அடித்தார்.

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடந்த 'ஐ' பிரிவு லீக் போட்டியில் ஈராக் அணி 1-4 என, நார்வேயிடம் தோல்வியடைந்தது. இப்போட்டியில் ஈராக் அணிக்காக ஒரு கோல் அடித்தார் கேப்டன் ஐமன் ஹுசைன்.

கால்பந்து கனவுடன் சிறு வயதிலேயே பயிற்சியில் ஈடுபட்டார் ஹுசைன் 30. ஆனால் 12வது வயதில், ராணுவ வீரரான அவரது தந்தை, புதிய வீட்டுக்கான கட்டுமான பொருட்கள் வாங்க சென்ற போது பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார். அடுத்த சில ஆண்டுகளில் ராணுவத்தில் இருந்த மூத்த சகோதரரும் காணாமல் போனார்.

எனவே பாதியில் நின்ற வீடு, குடும்பத்தை கவனிக்க வேண்டிய சூழலால், கால்பந்தை கைவிட துணிந்தார். ஆனால் அவரது தாய், 'இது உன் கனவு, இதில் நீ சாதிக்க வேண்டும்' என ஊக்கப்படுத்தினார். பின் கடினமாக பயிற்சி செய்து, ஈராக் கால்பந்து அணியில் இடம் பிடித்தார். தகுதி போட்டியில் சிறப்பாக செயல்பட்டு, ஈராக் அணியை 1986க்கு பின், உலக கோப்பை தொடரில் இடம் பெற செய்தார். இதுவரை ஈராக் அணிக்காக 96 போட்டியில், 34 கோல் அடித்துள்ளார்.

Advertisement