பிரேசில் வீரர் ராபின்ஹா காயம்

நியூ ஜெர்சி: பிரேசில் கால்பந்து வீரர் ராபின்ஹா 29. முன்கள வீரரான இவர், ஹைதி அணிக்கு எதிரான போட்டியில் வலது கால் தொடையின் பின்பகுதியில் காயமடைந்தார். இதனால் முதல் பாதி முடிவதற்கு முன், போட்டியில் இருந்து விலகினார். பிரேசில் அணி, தனது கடைசி லீக் போட்டியில் (ஜூன் 24, மயாமி) ஸ்காட்லாந்தை சந்திக்கிறது. தற்போது சிகிச்சை மேற்கொண்டு வரும் ராபின்ஹா, ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டிக்கு முன், பூரண குணமடைந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மாறிய கணிப்பு

நடப்பு உலக கோப்பை தொடரில், முதல் முறையாக 48 அணிகள் பங்கேற்கின்றன. அர்ஜென்டினா, பிரேசில், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற உலகின் முன்னணி அணிகளுக்கு எதிராக கேப் வெர்டே, குராசோ, காங்கோ போன்ற தரவரிசையில் பின்தங்கிய அணிகள் எப்படி விளையாட போகின்ற என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால், போட்டிகளின் சுவாரஸ்யம் குறைந்துவிடும், முடிவுகள் ஒருதலைபட்சமாக அமையும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் நிறைய போட்டிகளில் கணிப்புகள் தவறாகின.

அட்லாண்டாவில் நடந்த போட்டியில் ஸ்பெயின், கேப் வெர்டே அணிகள் மோதின. இதில் ஸ்பெயின் அணி சுலபமாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போட்டி கோல் எதுவுமின்றி 'டிரா' ஆனது. ஹூஸ்டனில் நடந்த போட்டியில் போர்ச்சுகல், காங்கோ அணிகள் மோதின. போர்ச்சுகல் அணி கோல் மழை பொழியும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் போட்டி 1-1 என 'டிரா' ஆனது.

அகேப் வெர்டே, காங்கோ, குராசோ, ஹைதி, ஜோர்டான், உஸ்பெகிஸ்தான் அணிகள் தங்களது போட்டியில் எதிரணிக்கு வெற்றியை எளிதாக விட்டுத்தரவில்லை. முன்னணி அணிகளுக்கு சவால் கொடுத்தன.

ஸ்பெயின் பயிற்சியாளர் லுாயிஸ் டி லா புவென்டே கூறுகையில், ''கேப் வெர்டே அணிக்கு எதிரான போட்டியின் மூலம் பாடம் கற்றுக் கொண்டோம். உலக கோப்பை என்பது சமமான போட்டித்தன்மை கொண்ட ஒரு தொடர் என்பதை புரிந்து கொண்டோம். தரவரிசையில் பின்தங்கிய அணியாக இருந்தாலும், போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நெருக்கடி கொடுத்தது. எந்த ஒரு அணியையும் குறைத்து மதிப்பிடாமல் முழுத்திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே வெற்றி பெற முடியும்,'' என்றார்.

Advertisement