நடுவராக களமிறங்கிய பெண்கள்
அட்லாண்டா: உலக கோப்பை கால்பந்தில் முதன் முறையாக ஒரே போட்டியில் மூன்று அமெரிக்க பெண்கள் நடுவர்களாக செயல்பட்டனர்.
பிபா' சார்பில் 2026 உலக கோப்பை தொடருக்காக 170 நடுவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 2 நடுவர்கள், மூன்று உதவி நடுவர்கள், 1 'வி.ஏ.ஆர்' அதிகாரி என 6 பேர் மட்டுமே பெண்கள்.இதனிடையே அட்லாண்டாவில் நடந்த போட்டியில் செக் குடியரசு, தென் ஆப்ரிக்கா மோதின. இதில் அமெரிக்காவை சேர்ந்த டோரி பென்சோ (நடுவர்), கேத்ரின் நெஸ்பிட், புரூகே மயோ (உதவி) என மூன்று பெண் நடுவர்கள் களமிறங்கினர்.இதில் டோரி பென்சோ, 2023 பெண்கள் உலக கோப்பை தொடரில் ஸ்பெயின், இங்கிலாந்து மோதிய பைனலில் நடுவராக செயல்பட்ட அனுபவம்கொண்டவர். இப்போட்டியில் மூன்று நடுவர்களும் சிறப்பாக செயல்பட்டதாக பாராட்டுகின்றனர். அதேநேரம், போட்டியின் 82வது நிமிடத்தில் தென் ஆப்ரிக்கவீரர் மசெகோ அடித்த பந்து, 'பெனால்டி' ஏரியாவுக்குள் இருந்த செக் குடியரசு வீரர் பாவெல் சுல்கின் கையில் எதிர்பாராமல் பட்டது. உடனடியாக தென் ஆப்ரிக்காவுக்கு 'பெனால்டி' வழங்கப்பட்டது. இம்முடிவு விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதல் அமெரிக்கர்
'பிபா' உலக கோப்பை தொடரில் (ஆண்கள்) நடுவராக செயல்பட்ட முதல் அமெரிக்க பெண் டோரி பென்சோ. ஒட்டுமொத்த அளவில் இரண்டாவது இடம் பிடித்தார். முன்னதாக 2022, கத்தார் தொடரில் ஸ்டெபானியே ராப்பர்ட் (பிரான்ஸ்) களமிறங்கினார்.
இரண்டாவது முறை
ஒரு போட்டியில் மூன்று பெண்கள் நடுவராக பங்கேற்றது, இரண்டாவது முறையாக நடந்தது. இதற்கு முன் கடந்த 2022 தொடரில் மூன்று பெண்கள் நடுவராக செயல்பட்டனர்.