சீரமைக்கப்படுமா?

சேதமடைந்த மலட்டாற்றின் கரைப் பகுதிகள்... துார்வாரி பலப்படுத்த விவசாயிகள் கோரிக்கை

விழுப்புரம்: விழுப்புரம் அருகே துார்ந்துள்ள மலட்டாற்றை துார் வாரியும், சேதமடைந்த கரைப் பகுதிகளையும் பலப்படுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விழுப்புரம் தென்பெண்ணை ஆற்றிலிருந்து, தளவானுார் பகுதியில் கிளை ஆறாக மலட்டாறு பிரிகிறது. தளவானுாரில் தொடங்கி வி.அகரம், கொங்கம்பட்டு வழியாக கடலுார், புதுச்சேரி மாவட்ட கிராமங்களின் வழியாகச் சென்று கடலில் கலக்கிறது.

நீண்டகாலமாக ஆற்றில் வெள்ள நீர் செல்லாமல் மணல் மேடாக மாறியதாலும், பல கிராமங்களில் ஆக்கிரமிப்புகளாலும் மலட்டாறு துண்டிக்கப்பட்டும், பல இடங்களில் துார்ந்தும் கிடக்கிறது.

இடையே ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது, தென்பெண்ணையாற்றின் நீர் மலட்டாற்றில் சென்றதால், பில்லுார், கொங்கம்பட்டு உள்ளிட்ட பல இடங்களில் கரைகள் உடை ந்து, விவசாய நிலங்களில் வெள்ளநீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது.

கடந்த 2024ம் ஆண்டில் ஏற்பட்ட பெஞ்சல் புயல், மழையால் ஏற்பட்ட வெள்ளத்தின்போது, ஆறுகளில் வெள்ள நீர் அதிகளவில் ஓடி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

இந்த புயலுக்குப்பின் பல இடங்களில் தென்பெண்ணை மற்றும் மலட்டாறுகளின் கரைகள் சேதமடைந்தது. மலட்டாறு தொடங்கும் பகுதியில் உள்ள திருப்பாச்சானுார், பில்லுார், கொங்கம்பட்டு உள்ளிட்ட இடங்களில் கரைகள் உடைந்து விவசாய நிலங்களில் வெள்ள நீர் புகுந்து சேதத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து, பொதுப்பணித் துறையினரிடம் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.

இதே போல், மலட்டாறு துார்வாராமல் கிடப்பதோடு, கரையும் உடைந்துள்ளதால் வரும் மழைக் காலங்களில், வெள்ள நீர் வரும்போது ஆற்றின் கடைகோடி பகுதிகள் வரை தண்ணீர் செல்லாமல் வீணாகும் நிலை ஏற்படும்.

இதனால், மலட்டாற்றை துார்வாரி, உடைந்த கரையை பலப்படுத்த வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து, பாக்கம், ராம்பாக்கம், வி.அகரம் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ‘விழுப்புரம் அருகே துவங்கும் மலட்டாறு, வி.அகரம், சின்னமடம், கொங்கம்பட்டு வழியாக வீராணம், சொரப்பூர், ஆலமரத்துக்குப்பம் வரை மாவட்டத்தின் எல்லை முடிய செல்கிறது. இந்த ஆறு பல ஆண்டுகளாக துார்வாரப்படாமல் உள்ளது. மலட்டாற்றில் பல இடங்களில் புதர்மண்டி காணப்படுகிறது. இதனால், ஆற்று நீரானது ஊருக்குள் புகுந்து சேதம் ஏற்படுகிறது.

எனவே, உடைப்பு ஏற்பட்டுள்ள ஆற்றினை சரிசெய்து கரையை மேம்படுத்தியும், கரையின் மேல் பனைவிதைகளை நட்டு கரையினை மேலும் பலப்படுத்தவும், துார் வாரவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மணல் திருட்டு நடப்பதால் ஆற்றின் கரைகள் சேதமடைந்துள்ளது. கரையை சேதப்படுத்துவோர்  மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Advertisement