நிதி ஒதுக்கப்படுமா?

மாநில நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்கு... போக்குவரத்து அதிகரிப்பால் எதிர்பார்ப்பு 

உடுமலை: பல்லடம், தாராபுரம் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் சின்னாறு ரோடு விரிவாக்கத்துக்கு நெடுஞ்சாலைத்துறையால், பல முறை கருத்துரு அனுப்பியும் அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. மாநில நெடுஞ்சாலைகள் பல்லாங்குழியாக மாறி வருவதால், வாகன ஓட்டுநர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். உடுமலை–பல்லடம் மாநில நெடுஞ்சாலை, கடந்த 2009ல் இருவழித்தடமாக விரிவுபடுத்தப்பட்டது.

திருப்பூர், பல்லடம் உள்ளிட்ட தொழில்நகரங்களுடன், உடுமலையை இணைக்கும் இந்த ரோட்டில், சில ஆண்டுகளாக போக்குவரத்து பல மடங்கு உயர்ந்துள்ளது. அதற்கேற்ப ரோடு விரிவுபடுத்தப்படவில்லை.

அதே வேளையில், போதிய பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளாமல் ஆங்காங்கே ரோடு பல்லாங்குழியாக மாறி வருகிறது. இவ்வழித்தடத்தில், நுாற்பாலைகள், பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் மின் உற்பத்திக்கான காற்றாலைகளும் அதிகளவு நிறுவப்பட்டுள்ளது.

இதனால், கனரக போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து, அதற்கேற்ப ரோடு அகலம் இல்லாததால், விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.

கருத்துரு தயாரிப்பு இப்பிரச்னைக்கு தீர்வாக, 10 மீ., அகலமுள்ள ரோட்டை 15.2 மீ.,க்கு விரிவாக்கம் செய்து, மையத்தடுப்புடன், நான்கு வழிச்சாலையாக மாற்ற நெடுஞ்சாலைத்துறையால் கருத்துரு தயாரிக்கப்பட்டது.

இந்த கருத்துருவில் கூடுதலாக பாலங்கள் மற்றும் குடிமங்கலம் நால்ரோட்டில் மேம்பாட்டு பணி மேற்கொள்ளுதல் உள்ளிட்ட திட்ட வடிவமைப்பும் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டு, பல ஆண்டுகளாகியும், அரசால் நிதி ஒதுக்கப்படவில்லை.

இதனால், வாகன போக்குவரத்தில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, ‘பேட்ஜ் ஓர்க்’ கூட முறையாக செய்யப்படாமல், இருசக்கர வாகன ஓட்டுநர்கள் தவித்து வருகின்றனர்.

இதே போல், பொள்ளாச்சி–தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில், புதுப்பாளையம் முதல் குறிப்பிட்ட தொலைவிலான ரோடு, உடுமலை உட்கோட்டத்தால் பராமரிக்கப்படுகிறது.

இந்த ரோட்டில், கடந்தாண்டு பெய்த வடகிழக்கு பருவமழைக்கு பிறகு, பல்வேறு இடங்கள், குண்டும், குழியுமாக மாறியது. ‘பேட்ஜ் ஓர்க்’ செய்த பகுதிகளும், மேடாக மாறி பாதிப்பு ஏற்படுகிறது. இந்த ரோடு விரிவாக்கமும் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

மாநில நெடுஞ்சாலைகளுக்கு இணையாக, உடுமலை–சின்னாறு ரோட்டிலும் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. மறையூர், காந்தலுார், மூணாறு உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு உடுமலையில் இருந்து இந்த ரோடு வழியாகவே செல்ல வேண்டும்.

இதில், ‘எஸ்’ வளைவு உள்ளிட்ட பல இடங்களில், வாகனங்கள் விலகிச்செல்ல முடிவதில்லை. வார விடுமுறை நாட்களில், வனப்பகுதியில் பல கி.மீ., தொலைவுக்கு, வனப்பகுதியில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பது தொடர்கதையாகியுள்ளது.

இந்த ரோடு விரிவாக்கம், வனத்துறை அனுமதி கிடைக்காதது உள்ளிட்ட காரணங்களால் தாமதமாகி வருகிறது. உடுமலையை தொழில் மற்றும் சுற்றுலா நகரங்களுடன் இணைக்கும் இந்த ரோடுகளை மேம்படுத்த இனியாவது நிதி ஒதுக்கும் என்ற எதிர்பார்ப்பு இப்பகுதி மக்களிடையே அதிகரித்துள்ளது.

Advertisement