அறநிலையத்துறை பணிகள் இனி இணையதளத்தில் மட்டுமே

1

சென்னை: 'அறநிலையத் துறை அலுவல் தொடர்புகளை, இணையதளத்தில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்' என, ஹிந்து சமய அறநிலையத் துறை கமிஷனர் வினய் உத்தர விட்டுள்ளார்.

அவரது அறிக்கை:

ஒருங்கிணைக்கப்பட்ட கோவில் நிர்வாக மேலாண்மை திட்டத்தின்படி, பக்தர்களுக்கான சேவைகள் தொடர்பான விபரங்களை அறிய, தேசிய தகவலியல் மைய உதவியுடன் இணையதளம் தொடங்கப்பட்டது.

இப்போதுள்ள தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு, தகவல் பாதுகாப்பு போன்ற தரவுகள், இந்த இணையதளத்தில் முறைப்படுத்தப்பட்டுள்ளன. இணையதளத்தின் வாயிலாக கட்டணம் செலுத்தி, பக்தர்கள் பயன் பெறலாம்.

இந்த இணையதள செயல்பாடுகளை சீராய்வு செய்தபோது, ஒவ்வொரு தொகுப்புகளிலும் விபரங்கள் உள்ளீடு செய்யப்படாமலும், படிவங்கள் பூர்த்தி செய்யப்படாமலும் நிலுவையில் இருப்பது கண்டறியப்பட்டது.

எனவே, அனைத்து சார்நிலை அலுவலர்களும் ஒவ்வொரு மாதமும் 5ம் தேதிக்குள், விபரங்களை விடுதல் இன்றி உள்ளீடு செய்ய வேண்டும். இதை சரிபார்த்து உறுதி செய்து, ஹிந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.

ஆணையர் அலுவலகத்திற்கு தேவைப்படும் விபரங்களை இனி, காகித வடிவில் அனுப்பக் கூடாது.

கோரப்படும் விபரங்களை அதற்குரிய இணையதளப் படிவத்தில், உடனுக்குடன் அனைத்து சார்நிலை அலுவலர்களும் பதிவேற்றம் செய்ய வேண்டும். தவறும் சார்நிலை அலுவலர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement