ரூ.25,000 லஞ்சம் வாங்கிய ஆவின் அதிகாரிக்கு சிறை
சென்னை: பால் வியாபாரியிடம், 25,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில், திருச்சியில் ஆவின் பொது மேலாளராக இருந்தவருக்கு, மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலுார் தாலுகா, குன்னம் அடுத்த நக்கசேலம் பகுதியை சேர்ந்தவர் ஞானசேகரன். பால் வியாபாரி. இவர், கடந்த 2008ம் ஆண்டு, பெரம்பலுார் மற்றும் அரியலுார் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில், பால் சேகரிப்பதற்காக, தன் நிறுவனத்தின் கீழ் இயக்கப்படும், நான்கு சக்கர வாகனங்களுக்கு, நான்கு வழித்தட அனுமதி வழங்க, திருச்சியில் உள்ள, ஆவின் பொது மேலாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
இதனை பரிசீலனை செய்ய, அப்போது, திருச்சி மாவட்ட ஆவின் பொது மேலாளராக இருந்த சுப்பையன், 25,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து, திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில், ஞானசேகரன் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, 2008, பிப்., 18ம் தேதி, ஞானசேகரனிடம் லஞ்ச பணத்தை பெற்ற சுப்பையனை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு, திருச்சி மாவட்டத்தில், ஊழல் வழக்குகளை விசாரிக்கும், நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சுப்பையனுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை, 30,000 ரூபாய் அபரா தம் விதித்து, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது போதாது இவரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும். அப்போதுதான் சொத்து சேர்க்கும் அதிகாரிகளுக்கு புரியும்.