வி.சி.க., 'மாஜி' குற்றச்சாட்டு; அமைச்சர் காட்டம்

3

ராமநாதபுரம்: மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் பணியிட மாறுதலுக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜிவ் தரப்பில் பணம் வாங்கியதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ., பாலாஜி கூறிய குற்றச்சாட்டுக்கு, த.வெ.க.,வைச் சேர்ந்த அமைச்சர் ராஜிவ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரத்தில் அமைச்சர் ராஜிவ் கூறியதாவது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல ஆண்டுகளாக ஜாதி சான்றிதழ் கேட்டு போராடி வரும் காட்டுநாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் கோரிக்கை, வருவாய் துறை அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். தி.மு.க., ஆட்சியில், 'சீல்' வைத்த ஆலைகளை லஞ்சம் கொடுத்து திறந்தது போல் இந்த ஆட்சியில் நடக்காது.

விதிகளை மீறி இயங்கும் சாய ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஹைட்ரோ கார்பன் போன்ற எந்த திட்டமும் தமிழகத்தில் அனுமதிக்கப்படாது.

மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் பணியிட மாறுதலுக்கு பணம் வாங்கியதாக வி.சி.க., முன்னாள் எம்.எல்.ஏ., பாலாஜி குற்றஞ்சாட்டியுள்ளார். என் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள், அதற்கான ஆதாரங்களை காட்ட வேண்டும்.

ஒருவர் மீது குற்றஞ்சாட்டுவது எளிது. என் மீது சாட்டப்பட்டுள்ள குற்றம் தவறானது. குற்றம் சுமத்தியவர்கள் தான் குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும். என் துறையை பொறுத்தவரை நான் நேர்மையாகவும், உண்மையாகவும் பணிபுரிந்து வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement