ஆற்றில் தீ பிடித்து எரிந்த புற்கலால் பாதிப்புக்குள்ளாகும் கால்நடைகள்   

கள்ளக்குறிச்சி: சோமண்டார்குடி கோமுகி ஆற்று பகுதியில் தீ பிடித்து எரிந்து வருவதால் மேய்ச்சலுக்காக விடப்படும் கால்நடைகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கோமுகி ஆற்றின் குறுக்கே சோமண்டார்குடி தடுப்பணை அமைந்துள்ளது. இந்த தடுப்பணை அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாகவும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. பருவ மழை காலங்களில் கோமுகி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் தருணங்களில் சோமண்டார்குடி தடுப்பணை நிரம்பி வழிந்தோடும். சோண்டார்குடி பகுதியில் உள்ள விவசாயிகள் பயிர் சாகுபடி மட்டுமின்றி ஆடு, மாடு போன்ற கால்நடைகள் வளர்ப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.   

இந்நிலையில் தற்போது கடும் வெயிலினால் நிலவி வரும் வறட்சியால், சோமண்டார்குடி தடுப்பணை மற்றும் ஆற்று பகுதியில் தண்ணீர் இன்றி முற்றிலும் வறண்டு கிடக்கிறது. இதற்கிடையே ஆறு மற்றும் தடுப்பணை பகுதியில் வளர்ந்துள்ள விஷல், செடி, கொடிகள், புற்கள் பகுதியில் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்காக விவசாயிகள் விட்டு வருகின்றனர். மர்ம ஆசாமிகள் யாரோ கோமுகி ஆற்றில் உள்ள விஷல் உள்ளிட்ட புற்கள் பகுதியில் வைத்த தீயால் தொடர்ந்து எரிந்து வருகிறது. கடும் வெயில் காய்வதால் ஆற்று பகுதியில் தீ மளமளவென பரவி வருகிறது. தீ பிடித்த எரிந்த பகுதியில் சாம்பல் மட்டுமே காணப்படுகிறது. அப்பகுதியில் தொடர்ந்து தீ பரவி வருகிறது.  இதனால் மேய்ச்சலுக்காக விடப்படும் கால்நடைகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. 

Advertisement