புதுச்சேரி போலி மருந்து விவகாரம் செய்திக்கு தொடர்ச்சி...

பூத்துறையில் குடோன் கண்டுபிடிப்பு புதுச்சேரி, குருமாம்பேட்டில் உள்ள ‘மெடினோக் ெஹல்த் கேர்’ கம்பெனியில் மருந்து கட்டுப்பாட்டு துறை மற்றும் மேட்டுப்பாளையம் போலீசார் நேற்று முன்தினம் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அந்த கம்பெனிக்கு வந்த வேனை சோதனை செய்ததில், ‘பிரிகாபலின்–150’ மாத்திரைகள் 6 அட்டை பெட்டிகளில் 1.50 லட்சம் இருந்தன. இதன் மொத்த மதிப்பு ரூ. 30 லட்சம் ஆகும்.

போலீசார், வேன் டிரைவரிடம் விசாரித்ததில், பூத்துறை குடோனில் இருந்து ஏற்றி வருவதாக தெரிவித்தார். சந்தேகமடைந்த தொடர் விசாரணையில், அனுமதி பெறாத பிரிகாபலின்–150 மாத்திரை தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் மற்றும் தயாரிக்கப்பட்ட மருந்துகள் பூத்துறை குடோனில் இருப்பு வைத்திருப்பது தெரியவந்தது. இந்த குடோனை ‘‘மெடினோக் ெஹல்த் கேர்’ நிறுவன உரிமையாளர் பிரபாகரன், ‘சாய் சரோன்’ என்ற பெயரில் இயக்கி வருவது தெரியவந்தது.

ரூ. 2 கோடி போலி மருந்துகள் பறிமுதல் பூத்துறை தமிழகப் பகுதி என்பதால், இதுகுறித்து சென்னையில் உள்ள மருந்து தரக்கட்டுப்பாட்டு துறை இணை இயக்குநருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விழுப்பரம் மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆய்வாளர் சைலஜா தலைமையிலான குழுவினர் நேற்று பூத்துறையில் உள்ள ‘சாய் சரோன்’ குடோனில் சோதனை மேற்கொண்டனர். அங்கு ‘பிரிகாபலின்–150’ மாத்திரை உள்ளிட்ட 20 வகையான மருந்துகள் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

புதுச்சேரி குருமாம்பேட் மற்றும் தமிழக பகுதியான பூத்துறையில் புதுச்சேரி மற்றும் தமிழக மருந்து தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் நடத்திய சோதனையில் சுமார் ரூ. 2 கோடி மதிப்புள்ள போலி மருந்துகள், அதற்கான மூலப்பொருட்கள் சிக்கியுள்ளது. இதனால், இந்த போலி மருந்து தயாரிப்பு எவ்வளவு நாட்களாக நடைபெற்று வருகிறது, இதற்கு யார், யாரெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரியில் கடந்தாண்டு புயலை கிளப்பிய போலி மருந்து விவகாரத்தில் 26 பேரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்த நிலையில், இவ்வழக்கு கடந்தாண்டு இறுதியில் சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், மேலும் ஒரு போலி தொழிற்சாலை கண்டுபிடித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement