நடைபாதையை மீண்டும் ஆக்கிரமித்தால் அபராதம் இரட்டிப்பாகும்: அமைச்சர் கவுடா

பெங்களூரு: ''ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நடைபாதைகளில், மீண்டும் ஆக்கிரமிப்பு செய்வோருக்கு இரு மடங்கு அபராதம் விதிக்கப்படும்,'' என, அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

பெங்களூரில் உள்ள ஜி.பி.ஏ., தலைமை அலுவலகத்தில், பெங்களூரு நகர வளர்ச்சி துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா வருவாய் துறை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனைக்கூட்டம் நடத்தினார்.

அப்போது, அவர் பேசியதாவது:

ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள, 23 லட்சம் சொத்துக்களுக்கு உடனடியாக இ - பட்டா வழங்கப்பட வேண்டும். சொத்து வரி செலுத்தாதவர்களிடம் வரி வசூல் செய்ய வேண்டும். பி - பட்டா வைத்திருப்போர், ஏ - பட்டாவுக்கு மாறுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நடைபாதைகளில், மீண்டும் ஆக்கிரமிப்பு செய்வோருக்கு இரு மடங்கு அபராதம் விதிக்கப்படும். மேலும், மழை நீர் வடிகால் பகுதிகளில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற திட்டமிடப்பட்டு உள்ளது. இது குறித்து, விரைவில் முடிவு எடுக்கப்படும்.

நகரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பலகைகள், பேனர்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும். சட்டவிரோதமாக பேனர் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தக் கூடிய வாகனங்கள் முறையாக பதிவு செய்திருக்க வேண்டும். இந்த வாகனங்களில் ஜி.பி.எஸ்., கருவிகளை பொருத்துவது கட்டாயமாகும். பொது இடங்களில் குப்பை வீசுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

தனியாருக்கு சொந்தமான இடங்களில் உள்ள குப்பையை அகற்றுவதற்கு ஆகஸ்ட் 15ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுகிறது. இல்லையெனில், மாநகராட்சி ஊழியர்களே சுத்தம் செய்வர். இதற்கான செலவு தொகையை நிலத்தின் உரிமையாளர் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement