அரிச்சுவடியே தெரியாத ஆலோசகரால் அரசுக்கு வெட்டி செலவு!

3

“ஓய்வு பெற்றவருக்கு மறுபடியும் வேலை வழங்க எதிர்ப்பு தெரிவிக்கிறாங்க...” என்ற பரபரப்பான தகவலு டன், பெஞ்சுக்கு வந்தார் அந்தோணிசாமி.

“எந்த துறையில பா...” என கேட்டார் அன்வர்பாய்.

“தமிழக அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் கீழ், மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் செயல்படுது... இதன் பதிவாளரா இருந்த மத்தேயூ, கடந்த மே 31ல ஓய்வு பெற்றாருங்க...

“இவர் இருந்தப்ப, ஆணையத்தில் நடந்த பதவி உயர்வு, பணியாளர்கள் நியமனம், இடமாற்றங்கள்ல ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்துச்சு... குறிப்பா, விருப்ப ஓய்வு பெற்ற ஒருத்தரை, மறுபடியும் அழைச்சிட்டு வந்து ஆணையத்துல வேலை குடுத்தாருங்க...

“அதேபோல, 'ஆணைய பதிவாளரா, மாவட்ட நீதிபதி அந்தஸ்து உள்ளவர் தான் இருக்கணும்'னு அரசாணையே இருக்கு... ஆனா, அதை எல்லாம் கண்டுக்காம, கடந்த தி.மு.க., ஆட்சியில பதிவாளரா மத்தேயூ நியமிக்கப்பட்டாருங்க...

“இந்த சூழல்ல, காலியா இருக்கிற பதிவாளர் பணிக்கு, இவரே விண்ணப்பம் போட்டிருக்காரு... அவரை மறுபடியும் அதே பொறுப்பில் நியமிக்க, ஆணைய ஊழியர்களே எதிர்ப்பு தெரிவிக்கிறாங்க...” என்றார் அந்தோணிசாமி.

“அரசு வீடுகளை வித்துடுதாவ வே...” என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...

“நீலகிரி மாவட்டம், கூடலுார் ஒன்றியத்துக்கு உட்பட்ட சேரங்கோடு, நெலாக்கோட்டை ஊராட்சிகள்ல, வீடு இல்லாத ஏழைகளுக்கு தமிழக அரசு சார்பில் தொகுப்பு வீடுகள் கட்டி குடுக்காவ... இதுல, ஏகப்பட்ட குளறுபடிகள் நடக்கு வே...

“அரசின் தேயிலை தோட்டங்கள்ல வேலை பார்த்து, ஓய்வு பெற்றவங்களுக்கு காரைக்கொல்லி என்ற இடத்தில் கட்டிய தொகுப்பு வீடுகளை, வெளியூரை சேர்ந்தவங்களுக்கு வித்துட்டு இருக்காவ... தொகுப்பு வீடுகளை கட்டி தரும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிகாரிகள் கைகோர்த்து, ஏழை பயனாளிகளை ஏமாத்தி தொகுப்பு வீடுகளை விற்பனை பண்றதா, முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார்கள் போயிருக்கு வே...” என்றார் பெரியசாமி அண்ணாச்சி.

“ஆலோசகர்கள் போட்டும் பயனில்ல ஓய்...” என, கடைசி மேட்டருக்கு வந்தார் குப்பண்ணா.

“எந்த துறையிலங்க...” என கேட்டார் அந்தோணிசாமி.

“சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,வில் கடந்த தி.மு.க., ஆட்சியில, 'ஆலோசகர்' என்ற பதவியில பலரை நியமிச்சா... குறிப்பா, 'மாஸ்டர் பிளான்' தயாரிக்கற பணிகளை மேற்பார்வையிட, ஒரு ஆலோசகரை போட்டா ஓய்...

“இவருக்கு மாத சம்பளமா, 3 லட்சம்ரூபாய்க்கு மேல கொட்டி குடுத்தா... ஆனாலும், 'மாஸ்டர் பிளான்' திட்ட பணிகள் முடிவுக்கு வரல ஓய்...

“இதனால, கூடுதலா சில ஓய்வு பெற்ற அதிகாரி களை ஒப்பந்த முறையில், ஆலோசகருக்கு உதவியா நியமிச்சா... மாஸ்டர் பிளான் சம்பந்தமா, சமீபத்துல சி.எம்.டி.ஏ.,வில், 'மீட்டிங்' நடந்துது ஓய்...

“அதுல பேசிய ஆலோசகர், 'சென்னை யின் புவியியல் அமைப்பு குறித்து எனக்கு தெரியாது'ன்னு சொன்னதை கேட்டு, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள், 'ஷாக்' ஆயிட்டா... 'இந்த மாதிரி அதிகாரியை வச்சு மாஸ்டர் பிளான் போட்டா உருப் படுமா'ன்னு, அதிகாரிகள் பலரும் புலம்பிண்டு இருக்கா ஓய்...'' என முடித்தார் குப்பண்ணா.

“ஜெயபால், இங்கன உட்காரும்...” என்றபடியே பெரியசாமி அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

Advertisement