கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் விருத்தாசலம் கோர்ட் தீர்ப்பு
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே வாலிபரை தலையில் கல்லை போட்டு கொலை செய்த வழக்கில், ஆசாமிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
விருத்தாசலம் அடுத்த விளாங்காட்டூரை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் பிளசன்ராஜ், 21; அதே பகுதியை சேர்ந்த கண்ணன் மகள் தீபா, 20; என்பவரும், கடந்த 2017ல் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதில், செல்வராஜ் குடும்பத்தினருக்கு உடன்பாடு இல்லாததால், மாமனார் கண்ணன் வீட்டில் பிளசன்ராஜ், தீபா வசித்து வந்தனர்.
பிளசன்ராஜ், புதுச்சேரியில் பணிபுரிந்து வந்ததால், அவ்வப்போது தனது தந்தை செல்வராஜ் வீட்டிற்கு வந்தபோது, மனைவியையும் வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். அப்போது, கணவன், மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. அதுபோல், கடந்த 2020, மார்ச் 24ம் தேதி, மனைவியை பிளசன்ராஜ் அழைத்தபோது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த மாமனார் கண்ணன், மனைவி தீபா, மைத்துனர் விஜய் ஆகியோர் பிளசன்ராஜிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த அர்ஜூனன் மகன் பாக்யராஜ், 41, என்பவரும் தட்டிக்கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பாக்யராஜ், அங்கிருந்த சிமென்ட் கல்லை எடுத்து பிளசன்ராஜ் தலையில் போட்டுள்ளார்.
படுகாயமடைந்த அவர், அதே இடத்தில் இறந்தார். இது குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, பாக்யராஜை கைது செய்தனர். மேலும், விருத்தாசலம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இதில், கண்ணன் உடல்நலக்குறைவு காரணமாக இறந்து விட்டார்.
நேற்று விசாரணைக்கு வந்த வழக்கில், விஜய், தீபா இருவரையும் விடுவித்த நீதிபதி விஜயகுமார், பாக்யராஜிக்கு ஆயுள் தண்டனையும், 1000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அரசு வழக்கறிஞர் விஜயகுமார் ஆஜரானார்.