காலியிடங்கள் அதிகரிப்பு: நர்ஸ்கள் போராட்டம்

கோவை: தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கம் சார்பில், கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று நர்ஸ்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவையில், 89 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 32 நகர்நல மையங்கள், 12 வட்டார தலைமை மருத்துவமனைகள் மற்றும் அரசு, இ.எஸ்.ஐ., மருத்துமனைகள் சேர்த்து 727 நிரந்தர நர்ஸ்களும், 224 பேர் தற்காலிகமாகவும் பணிபுரிகின்றனர். இருப்பினும், நோயாளிகள் எண்ணிக்கையை ஒப்பிடுகையில், 1,000 புதிய பணியிடங்கள் உருவாக்க வேண்டிய நிலை உள்ளது.

தற்போதே மூன்று மடங்கு காலியிடம் இருப்பதால், ஷிப்ட் முறையில், 12 மணி நேரம் நர்ஸ்கள் பணிப்புரிகின்றனர். 2015, 2019 ல் மருத்துவ பணியாளர் தேர்வாணையம் நடத்திய போட்டித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றும் தற்காலிக பணியிலும், அரசுப்பணி வாய்ப்பு இல்லாமலும் பலர் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், மனநலம் பாதிக்கப்பட்டு கைவிடப்பட்டோருக்காக அமைக்கப்பட்ட தீவிர சிகிச்சை மீட்பு மையங்களில், நிரந்தர பணியிடங்கள் மாற்றுவதை கண்டித்து, நேற்று நர்ஸ்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்க மாவட்ட தலைவர் ராமலட்சுமி, செயலாளர் தங்க முனீஸ்வரி, இணை செயலாளர் மாராத்தாள் மற்றும் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement