கார்பனை குறைக்கும் கிடை மாடுகள்; மதுரையில் அதிகாரிகள் ஆய்வு

மதுரை: நபார்டு வங்கியின் மதுரை மாபிப் நிறுவனம் சார்பில் இந்திய உணவு மற்றும் வேளாண் நிறுவன பிரதிநிதிகள் கிருஷ்ணன், விஷால் இருவரும் மதுரை நிலையூரில் மேய்ச்சல் மாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

மேய்ச்சல் மாடுகளால் சுற்றுச்சூழலில் கார்பன் சதவீதம் குறைவது குறித்து ஆய்வு மேற்கொண்டதாக தொழுவம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனர் கபிலன் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

தொழுவம் நிறுவனத்தின் துணை என்ற செயலி மூலம் மேய்ச்சல் மாடு வளர்ப்பவர்களை ஒருங்கிணைத்து விவசாயிகளின் வயலில் கிடை அமைக்க உதவுகிறோம். மேலும் கிராஸ் கார்ட்ஸ் செயற்கைகோள் மூலம் மேய்ச்சல் நிலங்களில் என்னென்ன வகையான புற்கள் என்பது வரை அனைத்தும் துல்லியமாக கண்காணிக்கப்படும். புற்கள் உற்பத்திக்கு காற்றிலுள்ள கார்பனை பயன்படுத்துவதால் கார்பன் சதவீதம் குறைகிறது.

ஒவ்வொரு மாடும் தினமும் சராசரியாக 5 கிலோ புல்லை சாப்பிடும். இவை ஒன்று முதல் இரண்டு மாதங்கள் புற்கள் வளர்வதற்கு வளிமண்டலத்தில் இருந்து 15 கிலோ அளவு கார்பன் டை ஆக்ஸைடை எடுத்துக் கொள்கிறது.

மதுரை மாவட்டத்தில் 40ஆயிரம் எண்ணிக்கையில் புலிக்குளம் வகை கிடைமாடுகள் வளர்கின்றன. மரங்கள் வளர்ப்பதை விட புற்கள் வளர்ந்து மேய்ச்சலுக்கு பயன்படும் போது வளிமண்டல கார்பன் அளவை அதிகமாக குறைக்க முடியும்.

பூமியில் பல்லுயிர்கள் பெருக்கம் சரியாக இருக்க வேண்டுமெனில் மேய்ச்சல் நிலங்களை பராமரிக்கவேண்டும் என்றார். மேய்ச்சல் மாடுகளை வளர்க்கும் முருகனுடன் அதிகாரிகள் கலந்துரையாடினர்.

Advertisement