54 ஊழியர்கள் நியமனத்தை ரத்து செய்ய ஏன் தாமதம்? கோர்ட் தீர்ப்பு வந்தும் மாநகராட்சி இழுபறி

கோவை : கோவை மாநகராட்சியில் 2021ல் வேலைக்கு சேர்ந்த 54 ஊழியர்களின் நியமனம் சட்ட விரோதமானது என ஐகோர்ட் அளித்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஊர்ஜிதம் செய்த பிறகும், அவர்கள் தொடர்ந்து வேலைக்கு வருகின்றனர். இதனால், மாநகராட்சி மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர ஏற்பாடு நடக்கிறது.

அப்போதைய அமைச்சர் வேலுமணியின் தலையீடு காரணமாக 54 பேரும் ஒரே இரவில் நியமிக்கப்பட்டதாக, தூய்மை பணியாளர் ஈஸ்வரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

விதிகளை மீறி நியமனம் நடந்துள்ளது. அதை ரத்து செய்ய வேண்டும் என்று ஜூன் 18 ம் தேதி நீதிபதிகள் சுப்பிரமணியம், செந்தில்குமார் உத்தரவிட்டனர். அதை எதிர்த்து 5 பேர் சுப்ரீம் கோர்ட் சென்றனர். கடந்த 14ம் தேதி நீதிபதிகள் விஸ்வநாதன், அருண்பாலி விசாரித்தனர். ஐகோர்ட் தீர்ப்பை அவர்கள் உறுதி செய்தனர்.

ஆனால், 54 பேரும் வேலைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அது குறித்து, ஈஸ்வரியின் வக்கீல் பன்னீர்செல்வம் மாநகராட்சி கமிஷனர் ரவி தேஜாவை சந்தித்து முறையிட்டார். நகராட்சி நிர்வாக இயக்குநரின் உத்தரவு வந்த பிறகும் நியமனங்களை ரத்து செய்யாதது ஏன் என கேட்டார்.

சென்னையில் இருந்து ஆலோசனையை எதிர்பார்ப்பதாக கமிஷனர் கூறியதும், கோர்ட் உத்தரவை அமல்படுத்த இன்னும் தாமதித்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர போவதாக பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இதனால் வாக்குவாதம் முற்றியது. ஈஸ்வரியை டிஸ்மிஸ் செய்ய தன்னால் முடியும் என்று கமிஷனர் மிரட்டியதாக பன்னீர்செல்வம் நமது நிருபரிடம் கூறினார். கமிஷனரை கேட்டபோது, நான் மிரட்டவில்லை. அரசின் சட்ட ஆலோசனை கிடைத்ததும், 54 பேர் வேலை தொடர்பாக நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

Advertisement