ஈரான் மீது 11வது நாளாக அமெரிக்கா தாக்குதல்; பேச்சுவார்த்தை நடத்த அதிபர் டிரம்ப் மறுப்பு
வாஷிங்டன்: '' ஈரான் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத் தயாராகும் வரை, பேச்சு நடத்த அமெரிக்காவுக்கு விருப்பம் இல்லை'' என்று கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனடிப் பேச்சுவார்த்தையை நிராகரித்தார்.
ஈரான் மீது 11வது நாளாக, இரவில் அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானின் ராணுவத் திறன்களைக் குறைக்கும் நோக்கில், அமெரிக்க ராணுவம் ஈரான் மீது தொடர்ந்து பத்தாவது இரவாகத் தாக்குதல்களை நடத்தியது. இது குறித்து அமெரிக்க படை மத்திய தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஹார்முஸ் ஜலசந்தியில் வர்த்தகக் கப்பல்களைத் தாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் ஈரான் ராணுவத் திறன்களை மேலும் சீர்குலைக்கும் வகையில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இரு தரப்பினரும் தொடர்ந்து இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் அதிபர் டிரம்ப் கூறியதாவது: ஈரான் ஒரு புதிய அணுசக்தி தளத்தை மீண்டும் அமைக்க முயற்சிக்கிறது. அவ்வாறு செய்தால், அமெரிக்கா அந்தத் தளம் மீது தாக்குதல் நடத்தும். ஈரான் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத் தயாராகும் வரை, பேச்சு நடத்த அமெரிக்காவுக்கு விருப்பம் இல்லை.
நான் உங்களிடம் சொல்ல விரும்புகிறேன். அவர்கள் (ஈரான்) சந்திக்க மிகவும் ஆசைப்படுகிறார்கள். ஈரான் முற்றிலுமாக அழிக்கப்பட்டு வருவதால், இதை மோதலை முடிவுக்குக் கொண்டுவர எப்படியாவது சந்திக்க விரும்புவதாக ஈரானிய அதிகாரிகள் கூறி வருகின்றனர். இவ்வாறு அதிபர் டிரம்ப கூறினார்.