வேளாங்கண்ணியை தொடர்ந்து தாம்பரம் ரயிலிலும் ஸ்ரீவி.,யில் ஸ்டாப்பிங் இல்லை பயணிகள் வேதனை

ஸ்ரீவில்லிபுத்துார், ஜூலை 25-

வேளாங்கண்ணி ரயிலை தொடர்ந்து தாம்பரம்- தென்காசி பகல் நேர வாரமிருமுறை சூப்பர் பாஸ்ட் ரயிலிலும் ஸ்ரீவில்லிபுத்துாருக்கு ஸடாப்பிங் வழங்கப்படாததால் அப்பகுதி மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

விருதுநகர்- செங்கோட்டை ரயில் வழித்தடத்தில் வழக்கமாக இயங்கும் ரயில்கள் ஸ்ரீவில்லிபுத்துாரில் நின்று செல்லும் நிலையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்போது, ஸ்ரீவில்லிபுத்தூரில் நின்று செல்ல மட்டும் ஸ்டாப்பிங் வழங்கப்படுவதில்லை.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து கொல்லம், செங்கோட்டை, விருதுநகர் வழியாக பல மாதங்களாக இயங்கும் வேளாங்கண்ணி ரயில், ஸ்ரீவில்லிபுத்துாரில் நின்று செல்ல இதுவரை ஸ்டாப்பிங் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் தற்போது அறிவிக்கபட்டுள்ள தாம்பரம்- தென்காசி பகல் நேர வாரமிருமுறை சூப்பர் பாஸ்ட் ரயிலிலும் ஸ்ரீவில்லிபுத்துாருக்கு ஸ்டாப்பிங் வழங்கப்படவில்லை.

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே ஸ்டேஷனில் ரூ.7 கோடி செலவில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ள நிலையில் ரயில்கள் நின்று செல்ல ஸ்டாப்பிங் வழங்கப்படாமல் இருப்பதால் ரயில்வே நிர்வாகத்திற்கு

வருவாய் இழப்பையும், மத்திய அரசிற்கு அவப்பெயரை உருவாக்கும் விதத்தில் உள்ளது. இவ்வாறு செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

எனவே விருதுநகர் செங்கோட்டை வழித்தடத்தில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்டேஷனில் நின்று செல்ல தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதற்காக பா.ஜ., ரயில் பயணிகள் சங்கம், சமூக ஆர்வலர்கள் ரயில்வே அமைச்சருக்கு மனு அனுப்பியுள்ளனர்.

Advertisement