'நீட்' எதிர்ப்பு தமிழ் தேசியம் தான் திருமாவளவன்  பேச்சு

புதுச்சேரி: நீட் எதிர்ப்பு என்பது தமிழ் தேசியம் தான் என, வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி., பேசினார்.

புதுச்சேரி நடந்த வி.சி., செயற்குழு கூட்டத்தில், அவர், பேசியதாவது:

இந்தியாவுக்கே நீட் வேண்டாம் என தொடக்கம் முதல் பேசியது வி.சி., கட்சி தான். மோடி பதவி விலகவோ, அரசை குற்றம் சாட்டியோ வட நாட்டவர் போராடவில்லை. தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோருகின்றனர்.

தற்போது தொடக்க நிலையில் உள்ளனர். நீட்டை திரும்ப பெற கோரவில்லை. நாம் சொல்கிறோம். நீட் தேர்வே கூடாது. மாநில அரசுகளுக்கு தேர்வு நடத்த தெரியாதா? பிளஸ் 2 மாணவர்களின் மதிப்பெண்களுக்கு பயனில்லை.

நீட்டுக்காக தனி பயிற்சி வகுப்பு சென்று வெல்ல வேண்டும். சிரமமாக இருப்பதால் முன்கூட்டியே வெளியிட்டு வணிகமாக்குகின்றனர்.

காங்., ஆட்சியில் நீட் கொண்டு வரப்பட்ட நிலையில் ஏன் பா.ஜ., துாக்கி எறியவில்லை. பல திட்டப்பெயர்களை மாற்றினார்கள்- நீட் தேர்வு காங்., கொண்டு வந்தது என காங்., மீது பழிபோடவோ, ரத்து செய்யவோ பா.ஜ., முன் வராதது ஏன்.

நீட் வேண்டாம் என, காங்.,கும், பா.ஜ.,வும் சொல்லாது. மாநில அரசு அதிகாரத்தில் தலையிடுகிறது.

பாடத்திட்டத்தில் கல்வி கற்கவிடாமல் பயிற்சி வகுப்பு மூலம் தேர்வு எழுத வைத்து மன அழுத்தத்தை உருவாக்குகின்றனர். பல போட்டி தேர்வுகளில் வினாத்தாள் வெளியாகியுள்ளது.

தர்மேந்திர பிரதானை மாற்றுவதால் பிரச்னை தீராது. நீட் தேர்வை முழுமையாக திரும்ப பெற வி.சி., வலியுறுத்துகிறது. தமிழ் தேசிய அரசியல் நாளை வென்றெடுக்கும் என சொல்லவில்லை. தேசியவாதம் தெளிவு தேவை. டில்லியில் அதிகாரம் குவிய கூடாது.

மாநில அரசுக்கு தன்னாட்சி அதிகாரம் தேவை. நீட் எதிர்ப்பு என்பதும் தமிழ் தேசியம் தான்' என்றார்.

Advertisement