காவிரி பிரச்னைக்கு பேச்சுவார்த்தை வாயிலாக தீர்வு: எம்ஜிஆர் பாணியில் கர்நாடகா செல்கிறார் விஜய்

29

சென்னை: காவிரி பிரச்னைக்கு, பேச்சுவார்த்தை வாயிலாக தீர்வு காண, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பாணியை பின்பற்றி முதல்வர் விஜய் கர்நாடகா செல்ல உள்ளார்.

கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே ஹேரங்கி, ஹேமாவதி, கபினி, கே.ஆர்.எஸ்., என, நான்கு அணைகள் கட்டப்பட்டு உள்ளன. இவற்றில் சேமிக்கப்படும் நீரில், ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி.,யை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

நடவடிக்கை



தமிழகத்திற்கு உரிய நீர் கிடைப்பதை உறுதி செய்வதற்கு, காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவும் அமைக்கப்பட்டு உள்ளன.

முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தி, இந்த உத்தரவுகளை பெற்றனர். ஆனால், காவிரி நீர் பிரச்னை தொடர்பாக, கர்நாடக முதல்வர்களை சந்தித்து, நேரடியாக எந்த பேச்சிலும் அவர்கள் ஈடுபட்டதில்லை.

எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்த போது, கர்நாடகா சென்று அம்மாநில முதல்வர்களாக இருந்த ராமகிருஷ்ண ஹெக்டே மற்றும் குண்டு ராவை சந்தித்து, காவிரி நீர் திறக்க நடவடிக்கை எடுத்தார்.

அதே பாணியை முதல்வர் விஜய் தற்போது கையில் எடுத்துள்ளார். இதற்காக, வரும் 3ம் தேதி பெங்களூருக்கு, தலைமை செயலர் சாய்குமார், நீர் வளத்துறை செயலர் சத்யபிரதா சாஹு, ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி உள்ளிட்டோருடன் முதல்வர் விஜய் செல்ல உள்ளார். அங்கு, கர்நாடக முதல்வர் சிவகுமாரை சந்தித்து பேச்சு நடத்த உள்ளார்.

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட, கர்நாடக காங்கிரஸ் அரசு தயாராகி வருகிறது. தன் தொகுதியில் மேகதாது அணை கட்டுமானப் பணியை, சட்டசபை தேர்தலுக்கு முன் தொடங்க, முதல்வர் சிவகுமார் தீவிரமாக உள்ளார். எனவே, இந்த பேச்சுவார்த்தையில் காவிரி நீர் திறப்பு, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேசப்பட உள்ளது.

ஆலோசனை



முதல்வர் விஜயின் பெங்களூரு பயணம் குறித்து, வேளாண் துறை அமைச்சர் வினோத், கும்பகோணத்தில் அளித்த பேட்டி:

மேகதாதுவில் அணை கட்ட, தமிழக அரசு ஒரு போதும் அனுமதிக்காது. காவிரி நம் உரிமை; அதை விட்டுக் கொடுக்க மாட்டோம். கர்நாடகாவில் ஆகஸ்ட் 3ம் தேதி, மேகதாது அணை தொடர்பாக நடக்கும் ஆலோசனை கூட்டத்திற்கு, முதல்வர் விஜய் செல்ல உள்ளார்.

இதில், கர்நாடக முதல்வரை சந்தித்து பேசுவார். கர்நாடக அரசு தரப்பில், 'போதிய மழை இல்லை; தண்ணீர் திறக்க முடியாது' என்று கூறப்படுகிறது. இருந்தாலும் தமிழக முதல்வர் நம் உரிமையை கேட்டு பெறுவார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement