அரசு பள்ளியில் நுாலகம் எரிந்து சாம்பல்: திட்டக்குடியில் பரபரப்பு  

திட்டக்குடி, ஜூலை 25–

திட்டக்குடி அரசு பள்ளியில் மர்மமான முறையில் நுாலக கட்டடம் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கடலுார் மாவட்டம், திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளி வளாகத்தில் உள்ள நுாலகத்தில் நேற்று காலை 7:00 மணியளவில் மர்மமான முறையில் தீப்பிடித்து கரும்புகை வெளியேறியது. 

இதையறிந்த, பள்ளி மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொண்டவர்கள் கூச்சலிட்டு, தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர்.

தகவலறிந்து வந்த திட்டக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் சண்முகம் தலைமையிலான வீரர்கள் தீயை அணைத்தனர்.

அதில், புத்தகங்கள், பதிவேடுகள், பழைய கேள்வித்தாள் கட்டுகள் எரிந்து சாம்பலானது. பீரோ, நாற்காலி உள்ளிட்ட தளவாட பொருட்கள் சேதமடைந்தன.

திட்டக்குடி போலீசார் தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Advertisement