பழவூர் ஏரியில் மண் திருட்டு; பொது மக்கள் சாலை மறியல்

செய்யூர்: பழவூர் ஏரியிலிருந்து அதிக அளவில் மண் எடுப்பதை கண்டித்து மதுராந்தகம் --- வெண்ணாங்குப்பட்டு மாநில நெடுஞ்சாலையில் அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சித்தாமூர் அடுத்த பழவூர் கிராமத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பெரிய ஏரி உள்ளது. பழவூர் கிராமத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர், விவசாய நில மேம்பாட்டிற்காக பொதுப்பணித்துறை அனுமதியுடன் டிராக்டர் மூலம், ஏரியில் இருந்து வண்டல் மண் எடுத்துள்ளார்.

ஆனால், அரசு அனுமதித்த அளவை காட்டிலும், அதிக அளவில் மண் அள்ளப்பட்டுள்ளது. சமூக விரோதிகள் சிலர் இரவு நேரங்களில் விதிமீறி வண்டல் மண் திருட்டில் ஈடுபடுகின்றனர்.

இதனால், ஏரியின் மண் வளம் பாதிக்கப்பட்டு, மழை காலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது. மணல் திருட்டு குறித்து வருவாய் துறை அதிகாரிகளிடம் தெரிவித்தால் கண்டுகொள்வது இல்லை. இந்நிலையில், பழவூர் கிராம மக்கள் மணல் திருட்டை கண்டித்து, மதுராந்தகம் - - வெண்ணாங்குப்பட்டு மாநில நெடுஞ்சாலையில் நேற்று மதியம் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த சித்தாமூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், சமாதான பேச்சு நடத்தினர்.

அதன்பின், ஏரியில் அதிக மண் எடுப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement