சின்னவேடம்பட்டி சுத்திகரிப்பு நிலைய வேலை: இரண்டு நாட்களுக்கு நிறுத்தம்

கோவை: சின்னவேடம்பட்டி ஏரி அருகே, மாநகராட்சி நிர்வாகம் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்து வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள், விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு சின்னவேடம்பட்டியை சேர்ந்த சுமார் 100 பேர் வந்தனர்.

கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என 80க்கும் மேற்பட்ட மனுக்கள் வழங்கப்பட்டன.

கமிஷனர் ரவி தேஜா, மேயர் ரங்கநாயகி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மக்கள், 'இரண்டு நாட்களில் நேரடியாக ஆய்வு செய்கிறேன் எனக்கூறி இரண்டு வாரங்களாகிவிட்டது. தற்போது வரை மாற்று இடத்தில் அமைப்பது குறித்து ஆய்வு செய்யவில்லை. தொழில்நுட்ப ஆய்வு செய்துள்ளீர்கள்.

சுத்திகரிப்பு நிலையத்தின் சுகாதார சீர்கேட்டால் எங்கள் உயிருக்கே ஆபத்து ஏற்படும். அதைப்பற்றி ஆய்வு செய்தீர்களா. கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும். அதுவரை பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்' என்றனர்.

''கோர்ட் உத்தரவுப்படி வேலை நடக்கிறது. உங்கள் கோரிக்கையை ஏற்று இரண்டு நாட்களுக்கு வேலை நிறுத்தி வைக்கப்படும். மாற்று இடம் குறித்து இந்த வாரத்திற்குள் நேரடியாக ஆய்வு செய்கிறேன்'' என கமிஷனர் உறுதியளித்தார்.

Advertisement