உத்திரமேரூரில் பதிவான ஓட்டுகளை சரி பார்க்கும் பணி நாளை தொடக்கம் 10 இயந்திரங்களை சரி பார்க்க கேட்டுள்ளது தி.மு.க.,
காஞ்சிபுரம்: உத்திரமேரூர் சட்டசபை தொகுதியில், த.வெ.க., வேட்பாளர் முனிரத்தினம் வெற்றி பெற்ற நிலையில், 'விவிபேட்' இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளும், ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளை சரி பார்க்க தி.மு.க., வேட்பாளர் சுந்தர் கோரிக்கை விடுத்ததையடுத்து, 10 இயந்திரங்களில் பதிவான ஓட்டு சரிபார்ப்பு பணி நாளை தொடங்க உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள், மே 4ம் தேதி வெளியாகின. இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆலந்துார், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம், உத்திரமேரூர் ஆகிய நான்கு சட்டசபை தொகுதி களிலும், த.வெ.க., வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
இதில், உத்திரமேரூர் தொகுதியில் போட்டியிட்ட, தி.மு.க., வேட்பாளர் சுந்தர், 70,694 ஓட்டுகள் பெற்றிருந்தார். சுந்தரை காட்டிலும், 14,223 ஓட்டுகள் வித்தியாசத்தில், த.வெ.க., வேட்பாளர் முனிரத்தினம் 84,917 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். மொத்தம் 14 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்நிலையில், 'விவிபேட்' இயந்திரத்தில் பதிவான ஓட்டு சீட்டுகளை எண்ணி சரி பார்க்க வேண்டும் என, தி.மு.க., வேட்பாளர் சுந்தர், ஓட்டு எண்ணிக்கை முடிந்த உடன் தேர்தல் கமிஷனரிடம் விண்ணப்பித்திருந்தார்.
அவரது விண்ணப்பத்தை ஆய்வு செய்த, தேர்தல் கமிஷன், 'விவிபேட்' இயந்திரங்களில் பதிவான ஓட்டுச்சீட்டுகளையும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகளையும், காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா தலைமையில் எண்ணி சரி பார்க்க உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, நாளை முதல், மூன்று நாட்களுக்கு, பெல் பொறியாளர்கள் உதவியுடன், கலெக்டர் அலுவலக முகாம் அலுவலகம் பின்னால் செயல்படும் ஓட்டுப்பதிவு இயந்திர கிடங்கில், ஓட்டுகள் சரி பார்க்கப்பட உள்ளன.
இதுகுறித்து, தி.மு.க., மாவட்ட செயலரும், வேட்பாளருமான சுந்தர் கூறியதாவது:
தேர்தல் முடிவுகள் வந்தவுடன் நாங்கள் விண்ணப்பித்தோம். இந்த தோல்வியை எங்களால் ஏற்க முடியவில்லை. அதனால், ஓட்டுச்சீட்டுகளை சரிபார்க்க முடிவு செய்துள்ளோம்.
தொகுதியில், மொத்தம் 321 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. அதில், 5 சதவீதம் சரி பார்க்க முடியும். அதாவது, 16 ஓட்டுச்சாவடிகளில் உள்ள இயந்திரங்கள் சரி பார்க்க முடியும்.
ஆனால், ஒவ்வோர் ஓட்டுச்சாவடிக்கும், தலா 40,000 ரூபாய் தேர்தல் கமிஷனுக்கு, கட்டணம் செலுத்த வேண்டும். இதனால், 10 ஓட்டுச்சாவடிகளில் பதிவான ஓட்டுகளை சரி பார்க்க கேட்டுள்ளோம்.
தேர்தல் முடிவுகள் சரியாக உள்ளதா என, பார்க்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.