போலீசார் இல்லாத வாகன தணிக்கை சாவடி; தடையின்றி செல்லும் கனிமவள கடத்தல் வாகனங்கள்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே புஞ்சை அரசன்தாங்கல் பகுதியில் உள்ள வாகன தணிக்கை சாவடியில் போலீசார் பணியில் இல்லாததால், கனிமவள கடத்தல் வாகனங்கள் தடையின்றி செல்வதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
காஞ்சிபுரம் -- வந்தவாசி சாலையில், புஞ்சை அரசன்தாங்கல் பகுதியில் வாகன தணிக்கை சாவடி உள்ளது.
காஞ்சிபுரம் -- வந்தவாசி சாலையில் வாகனங்களை கண்காணிக்கவும், கனிமவள கடத்தலை தடுக்கவும், இந்த சோதனைச்சாவடியில், காஞ்சிபுரம் தாலுகா போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்நிலையில், சமீபகாலமாக இங்கு போலீசார் பணியில் இருப்பதில்லை. இதனால், இரவு நேரங்களில் கனிமவள கடத்தல் வாகனங்கள், தடையில்லாமல் அருகிலுள்ள மாவட்டத்திற்கு செல்கின்றன.
மேலும், இதே பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா விற்பனை அமோகமாக நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எனவே, போலீஸ் தணிக்கை சாவடி நிரந்தரமாக செயல்படும் வகையில், சுழற்சி முறையில் போலீசார் நியமிக்கப்பட வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து, காஞ்சிபுரம் தாலுகா போலீசார் கூறியதாவது:
வாகன தணிக்கை சாவடி அருகிலேயே, கீழம்பி புறவழிச்சாலை பிரியும் இடத்தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும், புஞ்சை அரசன்தாங்கல் பகுதியிலும் அடிக்கடி ரோந்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.