குடிநீர் பிரச்னையை தீர்க்க கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
பழநி, ஜூலை 29
பழநி நகராட்சி பகுதியில் குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவுன்சிலர்கள் வலியுறுத்தி பேசினர்.
பழநி நகராட்சி கூட்டம் அதன் தலைவர் உமாமகேஸ்வரி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் கந்தசாமி, பொறியாளர் ராஜவேலு, சுகாதார அலுவலர் செந்தில் ராம்குமார் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம்:
செபாஸ்டின், தி.மு.க.,: குடிநீர் பிரச்னை உள்ளது. இதுகுறித்து விவாதிக்க கமிஷனர் இருந்தால் திருப்திகரமாக இருக்கும்.
ஜன்னத்துல் பிரதோஷ், அ.தி.மு.க.,: கமிஷனர் இல்லை, தீர்மானங்கள் சரியாக இல்லை, கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும்.
தலைவர்: இந்த அரசு வந்ததில் இருந்து மக்கள் பிரதிநிதிகளுக்கு முறையான மரியாதை வழங்கப்படுவதில்லை.
சுரேஷ், தி.மு.க.,: தெருவிளக்குகள் எரியவில்லை, அதனை சரி செய்ய வேண்டும்.
ஷாகுல் ஹமீது, தி.மு.க.,: குடிநீர் பிரச்னை அதிகரித்து உள்ளது. நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பத்மினி முருகானந்தம், காங்.,: கமிஷனர் வரவில்லை என்றால் கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டியது அவசியமாகிறது.
தீனதயாளன், தி.மு.க.,: தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த கடந்த கூட்டத்திலேயே நடவடிக்கை எடுப்பதாக கூறினர். ஆனால் செய்யவில்லை.
தலைவர்: அதிகாரிகள் இல்லாததால் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுகிறது.
இதற்கிடையில் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வலியுறுத்தி கவுன்சிலர் தீனதயாளன் தர்ணாவில் ஈடுபட்டார். அவரை தலைவர் சமரசம் செய்தார்.