இடம் பெறுமா சுற்றுலா வரைபடத்தில் திருப்புத்துார்: 20 ஆண்டாக சுற்றுலா திட்டப்பணிகளே இல்லை

திருப்புத்துார்:திருப்புத்துார் தொகுதி ஆன்மிக,புராதன,வரலாறு,இயற்கை சுற்றுலா தலங்கள் நிறைந்திருந்தும், அதற்கேற்ப சுற்றுலாத் தொழில் வளர்ச்சி பெறாமல் உள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் தொகுதியில் ஏராளமான பழமையான புராதன கோயில்கள்,குடவரைக்கோயில்கள்,கல்வெட்டுக்கள்,சிற்பங்கள் உள்ளன. இருப்பினும் அதற்கேற்ப சுற்றுலாத் தொழில் இங்கு வளர்ச்சி பெறவில்லை. வெளியூர் பயணிகளின் வருகை அதிகரிக்கப்படவில்லை. முக்கிய காரணமாக இப்பகுதி மத்திய அரசின் புராதன நகர் பகுதியாக அறிவிக்கப்படவில்லை.

புராதன சுற்றுலாத்தொழில் அபிவிருத்திக்கான மத்திய அரசின் சுற்றுலா வளர்ச்சித் திட்டப்பணிகள் இங்கு நிறைவேற்றப்படவில்லை. இதனால் நாட்டின் சுற்றுலா வரைபடத்தில் இப்பகுதி இடம் பெறவில்லை. மேலும், முன்பு, ஒன்றியம் வாரியாக செயல்படுத்தப்பட்ட சுற்றுலாத்தலங்களுக்கான அடிப்படைக் கட்டமைப்பிற்கான திட்டப்பணிகள் கூட 20 ஆண்டுகளாக நிறைவேற்றப்படவில்லை.

திருப்புத்துார் தொகுதியில் பிரபலமான குன்றக்குடி முருகன் மலைக்கோயில் மற்றும் மலையடிவாரத்தில் குடவரைக்கோயில்கள், பிள்ளையார்பட்டி குடவரைக் கோயில், அழகிய சிற்ப வேலைபாடு அமைந்த நேமம்,ந.வைரவன்பட்டி கோயில்கள், 108 வைணவத் தலங்களில் ஒன்றான திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயில், மூன்றடுக்கு மலைக் கோயிலான பிரான்மலை,திருக்கோளக்குடி கோயில்கள் உள்ளன.

வேட்டங்குடி பறவைகள் சரணாலயம், பிரான்மலைத் தொடர்,உசிலை மலை, பூலாங்குறிச்சி மலைத் தொடர் போன்ற இயற்கை சுற்றுலாத்தலங்கள் இருந்தும் இப்பகுதி சுற்றுலா வரைபடத்திற்குள் பிரதான இடத்திற்கு கொண்டு வர திட்டமிடப்படவில்லை. மேலும் விருந்தோம்பலுக்கும் சிறப்பு பெற்ற இப்பகுதியில் உணவுத்தொழில் சிறப்பாக உள்ளது. மாநிலத்தில் பரவலாக பணியாற்றும் உணவு உற்பத்தி தொழிலாளர்கள் இங்கிருந்தே செல்கின்றனர். அதையும் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை.

இங்குள்ள பிள்ளையார்பட்டி, திருக்கோஷ்டியூர், குன்றக்குடிக்கு வரும் ஆன்மிக சுற்றுலாப் பயணிகள் கும்பகோணம் போன்று, அடுத்தடுத்துள்ள சுற்றுலாத்தலங்களுக்கு செல்லும் வகையில் எந்த சுற்றுலாத்திட்டங்களும் உருவாக்கப்படவில்லை. மேலும் இங்குள்ள சுற்றுலாத்தலங்களில் வாகன நிறுத்தம், பயணியர் ஓய்வறை, வழிகாட்டி,தொடர்ச்சியான பஸ் வசதி போன்ற போதிய அடிப்படை வசதிகளும் இல்லை.

மாவட்டத்திற்கான சுற்றுலாத்துறை அலுவலகம் பெயரளவில் உள்ளது. பணியாளர் பற்றாக்குறை, வாகன வசதி இன்றி செயல்பட முடியாமல் தவிக்கிறது. இதனால் சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுலாத் தொழில் தனியார் முயற்சியாலேயே நடைபெறுகிறது. அரசிடம் சுற்றுலாத் தொழிலுக்கான திட்டமிடலுக்கான தேவையான புள்ளி விபரங்களே இல்லை. ஒவ்வொரு தலங்களுக்கும் வரும் பயணிகள் எண்ணிக்கை, பயணிகளின் தகவல்கள் இல்லாமல் இங்கு சுற்றுலாத் தொழில் தேங்கியுள்ளது.

முழுமையான தகவல்களுடன் சரியான திட்டமிடலுடன் தனியாருடன் அரசு இணைந்து செயல்பட்டால் இப்பகுதியில் சுற்றுலாத் தொழில் வளர்ச்சி பெறும் வாய்ப்புள்ளது. இதனால் உள்ளூர் மக்கள் வேலை வாய்ப்பு அதிகரிக்கும். உள்ளூர் பொருளாதாரமும் மேம்படும். இப்பகுதியில் சுற்றுலாத் தொழிலுக்கான வாய்ப்பு குறித்து முழுமையாக ஆய்வு செய்து, அதற்கேற்ப வளர்ச்சிக்கான திட்டப் பணிகளை அரசு வரையறுக்கப்படவேண்டும். தற்போது தேசிய நெடுஞ்சாலைகள் இப்பகுதியில் அதிகரித்துள்ளன. இதனால் சுற்றுலாத் தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்பும் அதிகரித்துள்ளன. அதை மாநில அரசு,உள்ளாட்சி அமைப்புகள் பயன்படுத்தி கொள்ள முன்வரவேண்டும். பழநி பாத யாத்திரை, திருக்கோஷ்டியூர் தெப்பம், சிராவயல் மஞ்சுவிரட்டு, பிள்ளையார்பட்டி விழாக்களின் போது வரும் ஆயிரக்கணக்கான பயணிகளை சுற்றுலா திட்டத்தில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளில் பிள்ளையார்பட்டி,திருக்கோஷ்டியூர்,குன்றக்குடி போன்ற இடங்களில் வசதியான பஸ் நிறுத்தங்கள், உணவகங்கள்,தங்குமிடங்கள் அமைக்க வேண்டும்.

Advertisement