மீன் விற்பனை செய்ததில் ரூ.16.53 லட்சம் முறைகேடு; 5 அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு

3

கோவை: தமிழ்நாடு மீன்வள மேம்பாட்டு கழகம் கோவை மார்க்கெட்டிங் பிரிவில், 2018-19 மற்றும் 2019 ஏப்., - ஜூன் காலத்தில் மீன் விற்பனை செய்ததில், ரூ.16.53 லட்சம் முறைகேடு செய்து, தமிழக அரசுக்கு நிதியிழப்பு செய்ததாக, ஐந்து அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

தமிழ்நாடு மீன்வள மேம்பாட்டு கழகத்தின் கோவை மார்க்கெட்டிங் பிரிவின் கீழ் காந்திபுரம், குறிச்சி, பாப்பம்பட்டி, சிங்காநல்லுார், சூலுார், உக்கடம், வெள்ளலுார் உட்பட, 12 சில்லறை மீன் விற்பனை நிலையங்கள், ஒரு மொபைல் விற்பனை யூனிட் செயல்பட்டு வந்தன. அதன்பின், ஆழியாறு விற்பனை நிலையமும் இதன் கட்டுப்பாட்டில் சேர்ந்தது.

மீன் கொள்முதல், விற்பனையில் முறைகேடு செய்து, அரசுக்கு நிதியிழப்பு ஏற்படுத்தியிருப்பதாக, லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் வந்தது. விசாரணை நடத்தியதில், 2018-19 நிதியாண்டு, 2019ல் ஏப்., முதல் ஜூன் வரையிலான காலத்தில் மீன் கொள்முதல், இருப்பு, விற்பனை மற்றும் வங்கி வரவு பதிவுகளில் போலி கணக்குகள் பராமரிக்கப்பட்டது கண்டறியப்பட்டது.

உண்மையான விற்பனை தொகை, தமிழ்நாடு மீன்வள மேம்பாட்டு கழகத்தின் வங்கி கணக்கில் செலுத்தாததும் தெரியவந்தது. ரூ.16.53 லட்சம் அரசுக்கு நிதியிழப்பு ஏற்பட்டுள்ளது.

அப்போது மார்க்கெட்டிங் மேலாளராக இருந்த கொளஞ்சிநாதன், தற்போது மீன்வளத்துறையில் மேட்டூர் அணை உதவி இயக்குனராக உள்ளார். முன்னாள் மார்க்கெட்டிங் மேலாளர் சத்தியமூர்த்தி, துணை மேலாளர் ராஜன், இளநிலை கணக்காளர் சகாயராஜ், வெளிமுகமை மூலம் நியமிக்கப்பட்ட உதவி மேலாளர் சுரேஷ்குமார் ஆகிய 5 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

Tamil News
Tamil News
கூட்டு சதியில் ஈடுபட்டு போலி ஆவணங்கள் தயாரித்தது, கணக்குகளை திரித்தது, மீன் இருப்பு மற்றும் விற்பனை தொகையை கையாடல் செய்ததாக லஞ்ச ஒழிப்பு துறை கூறியுள்ளதோடு, ஊழல் தடுப்பு சட்டத்தில் விசாரணையை துவக்கியுள்ளது.

Advertisement