வி.ஏ.ஓ., கொலை வழக்கு: இருவருக்கு ஆயுள்; உறுதி செய்தது உயர்நீதிமன்றம்

மதுரை: மணல் கடத்தலை தடுத்த துாத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கோயில்பத்து வி.ஏ.ஓ.,லுார்து பிரான்சிஸ் கொலை செய்யப்பட்ட வழக்கில், 2 பேருக்கு கீழமை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உறுதி செய்தது. விசாரணையை குறுகிய காலத்தில் நிறைவு செய்த போலீசார், கீழமை நீதிமன்ற நீதிபதி, அரசு தரப்பு வழக்கறிஞர்களுக்கு பாராட்டை பதிவு செய்தது.

முறப்பநாடு கோயில்பத்து வி.ஏ.ஓ.,லுார்து பிரான்சிஸ் 56. இவர் தாமிரபரணி ஆற்றில் கலியாவூரை சேர்ந்த ராமசுப்பிரமணியன், மாரிமுத்து சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்டதாக புகாரளித்தார். இதனால் வி.ஏ.ஓ.,மீது இருவரும் ஆத்திரமடைந்தனர். 2023 ஏப்.25 மதியம் 12:45 க்கு இருவரும் வி.ஏ.ஓ., அலுவலகத்திற்குள் லுார்து பிரான்சிசை அரிவாளால் வெட்டினர். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் லுார்து பிரான்சிஸ் இறந்தார். முறப்பநாடு போலீசார் கொலை வழக்கு பதிந்தனர்.

துாத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. 2023 செப்.15 ல் ராமசுப்பிரமணியன், மாரிமுத்துவிற்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து இருவரும் உயர்நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்தனர். நீதிபதிகள் என்.ஆனந்த் வெங்கடேஷ், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் கிறிஸ்டோபர் ஆஜரானார்.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இது வி.ஏ.ஓ.,தனது அலுவலக கடமைகளை செய்துகொண்டிருந்தபோது,​பகலில் அவரது அலுவலகத்திற்குள்ளேயே நிகழ்த்தப்பட்ட கொடூரமான படுகொலை. சட்டவிரோத மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கைகளை லுார்து பிரான்சிஸ் தீவிரமாக மேற்கொண்டு வந்ததை ஆவணங்கள் உறுதி செய்கின்றன. குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி அரசு தரப்பு நிரூபித்துள்ளது. கீழமை நீதிமன்ற உத்தரவு உறுதி செய்யப்பட்டு, மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

டாக்டர்களுக்கு அறிவுரை

குற்றவியல் வழக்குகளில், விபத்து பதிவேட்டில் 'காயமடைந்தவர் அல்லது இறந்த நபரை மருத்துவமனைக்கு கொண்டு வந்தவர்' என்கிற பத்தியில் வெறும் '108' (ஆம்புலன்ஸ்) என்று மட்டுமே சிகிச்சையளிக்கும் டாக்டர்கள்குறிப்பிடுகின்றனர். இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு வழக்கறிஞர்கள், காயமடைந்தவர் அல்லது இறந்தவர் '108' ஆம்புலன்ஸ் மூலமாக மட்டுமே கொண்டுவரப்பட்டார்;

சம்பந்தப்பட்ட நேரத்தில் அரசு தரப்பு சாட்சிகள் அங்கு இருந்திருக்க வாய்ப்பில்லை என்று அடிக்கடி வாதிடுகின்றனர். அச்சாட்சிகளின் நம்பகத்தன்மை மீது தேவையற்ற சந்தேகம் எழுப்பப்படுகிறது. மருத்துவ சட்ட நடைமுறைகளின்படி, காயமடைந்தவர் அல்லது இறந்த நபரை மருத்துவமனைக்கு அழைத்து வந்த அல்லது அவருடன் வந்த நபரின் பெயர் மற்றும் விபரங்களை உரிய பத்தியில் சரியாக பதிவு செய்வது டாக்டரின் கடமை.

விபத்து பதிவேட்டில் உள்ள 'கொண்டு வந்தவர்' என்ற பத்தியில், '108' என்ற குறிப்பை மட்டும் குறிப்பிடாமல், காயமடைந்தவர் அல்லது இறந்த நபரை மருத்துவமனைக்கு அழைத்து வந்த நபரின் பெயர் விபரங்களை பதிவு செய்யுமாறு, அரசு மருத்துவ அதிகாரிகள், மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தல்களை சுகாதாரத்துறை முதன்மை செயலாளர், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சித்துறை இயக்குனர் அனுப்ப வேண்டும்.

ஜாமின் வாய்ப்பு தவிர்ப்பு

இவ்வழக்கில் சம்பவம் நடந்த தேதியிலிருந்து 5 மாதங்களில் முழுமையான விசாரணையை முடிவடைந்தது. இறுதி அறிக்கை தாக்கல் செய்வதில் ஏற்பட்ட தாமதத்தை காரணம் காட்டி குற்றம் சாட்டப்பட்டவர் சட்ட ரீதியாக ஜாமின் கோருவதற்கான வாய்ப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.

அப்போதைய மதுரை தென் மண்டல போலீஸ் ஐ.ஜி.,அஸ்ரா கார்க் 2023 ஏப்.28 ல் பிறப்பித்த உத்தரவின் மூலம், விசாரணையை டி.எஸ்.பி., அந்தஸ்திலான ஒரு அதிகாரியிடம் ஒப்படைத்தார். ஆரம்பகட்ட விசாரணை அதிகாரியான இன்ஸ் பெக்டர் ஜமால் மற்றும் பின்னர் நியமிக்கப்பட்ட டி.எஸ்.பி.,சுரேஷ் ஆகிய இருவரும், 2 மாதங்களுக்கும் குறைவான காலத்திற்குள் விசாரணையை நிறைவு செய்தனர்.

அரசு குற்றவழக்கு தொடர்வுத்துறையினர் கீழமை நீதிமன்ற நீதிபதிக்கு முழு ஒத்துழைப்பை நல்கினர். போலீஸ் விசாரணை அதிகாரிகள், அரசு தரப்பு வழக்கறிஞர்கள் மற்றும் கீழமை நீதிமன்ற நீதிபதி ஆகியோரின் அர்ப்பணிப்பு மிக்க முயற்சிகளை இந்நீதிமன்றம் பாராட்டுகிறது. முறையான ஒருங்கிணைப்பு இருந்தால் விரைவாக முடிக்க முடியும் என்பதற்கு இவ்வழக்கு சிறந்த உதாரணமாக திகழ்கிறது. இதுபோன்ற வழக்குகளில் விரைவான விசாரணையை உறுதிசெய்ய சுற்றறிக்கையை தமிழக தலைமைச் செயலர் வெளியிட வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.

Advertisement