அர்ஜென்டினாவில் தீயணைப்பு ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் பலி; காட்டுத்தீயை அணைக்கும் போது சோகம்

சான் வான்: அர்ஜென்டினாவில் காட்டுத்தீயை அணைக்கும் பணியின் போது, தீயணைப்பு ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் 7 பேர் உயிரிழந்தனர்.

லா ரியோஹா மாகாணத்தில் உள்ள மலைப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக காட்டுத்தீ கொளுந்து விட்டு எரிந்து வருகிறது. இதை அணைப்பதற்காக, மேற்கு சான் வான் மாகாணத்தில் இருந்து தீயணைப்புத்துறை ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டுச் சென்றது. பெல் ரகத்தை சேர்ந்த அந்த ஹெலிகாப்டர், எதிர்பாராத விதமாக இஷிகுவாலாஸ்டோ பூங்கா அருகே விபத்துக்குள்ளானது. நேற்று காலை 10.30 மணியளவில் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்தது.

இந்த விபத்தில் தீயணைப்பு வீரர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் சிவில் பாதுகாப்புப் பணியாளர்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், மீட்புக் குழு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த சான் வான் மாகாண கவர்னர் மார்செலோ ஒர்ரேகோ, "ஹெலிகாப்டர் விபத்து குறித்த செய்தி மிகுந்த வேதனையை அளித்துள்ளது. இந்த விபத்தில் 7 பேரை இழந்துள்ளோம். அவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்," எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement