73 ஏரிகள் முற்றிலும் வறண்டதால் பாசன பணிகள் பாதிப்பு : வரலாறு காணாத அளவில் குறைந்த பருவமழை

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பொய்த்த நிலையில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. 73 ஏரிகள் நீர் இருப்பு இன்றி முற்றிலும் வறண்டு போனதால் குடிநீர், விவசாய சாகுபடி பணிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதங்களில் மாவட்டத்தில் பெய்ய வேண்டிய சராசரி மழையளவு 218 முதல் 251 மி.மீ., இந்த மழையளவு ஆண்டுக்கு ஆண்டு சீதோஷ்ண நிலையை பொறுத்து மாறுபடும்.

அதேபோல் ஜூன், ஜூலை மாதங்களில் பெய்ய வேண்டிய சராசரி மழையளவு 171 மி.மீ., ஆனால் எந்தாண்டும் இல்லாத அளவில் தற்போது 8.72 மி.மீ., மட்டுமே மழை பதிவாகி உள்ளது. இதனால் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. பாசன நீருக்கும், குடிநீருக்கும் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளதை இந்த மழையளவு உணர்த்தியுள்ளது.

முற்றிலும் வறண்ட ஏரிகள் முக்கிய நீராதாரமாக பழநி நங்காஞ்சியாறு வடிநில கோட்ட கட்டுப்பாட்டில் உள்ள 96 ஏரிகள் உள்ளன. இவற்றில் 2 ஏரிகளில் மட்டுமே 25 முதல் 50 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. 21 ஏரிகளில் 1 முதல் 25 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. 73 ஏரிகள் முற்றிலும் நீர் இருப்பு இன்றி வறண்டுள்ளன. இந்த ஏரிகளால் பாசன வசதி பெற்ற விவசாயிகள் கண்ணீர் வடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

நீர்த்தேக்க பகுதிகளில் மழை இல்லை பாலாறு பொருந்தலாறு, பரப்பலாறு, வரதமாநதி, குடகனாறு அணைகள், நஞ்காஞ்சியாறு நீர்த்தேக்க பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்யவில்லை. பாலாறு பொருந்தலாறு அணையில் மட்டும் 9 கனஅடி நீர்வரத்து உள்ளது. அதே அளவு நீர் வெளியேற்றவும் செய்யப்படுகிறது.

திண்டுக்கல்லின் நீராதாரமாக உள்ள ஆத்துார் காமராஜர் நீர்த்தேக்கத்திற்கான நீர்வரத்து முற்றிலும் இல்லாத நிலையில் கீழ் பழநி மலைப்பகுதியிலும் பருவமழை பொய்த்து உள்ளது.

இதனால் பாசன பணிகள் கேள்விக்குறி ஆகியுள்ளது. அடுத்துவரும் 60 நாட்கள் பெய்யும் பருவமழை தான் விவசாயிகளின் ஒரே நம்பிக்கையாக உள்ளது.



----

மாவட்டத்தில் பெய்த தென்மேற்கு பருவமழை விவரம்

ஆண்டு / ஜூன் / ஜூலை / ஆகஸ்ட் / செப்டம்பர்

2022 / 100.95 மி.மீ., / 116.87 மி.மீ., / 190.80 மி.மீ., / 103.97 மி.மீ.,

2023 / 42.77 மி.மீ., / 17.98 மி.மீ., / 134.03 மி.மீ., / 163.76 மி.மீ.,

2024 / 70.21 மி.மீ., / 40,21 மி.மீ., / 181.10 மி.மீ., / 45.93 மி.மீ.,

2025 / 17.00 மி.மீ., / 15.15 மி.மீ., / 42.00 மி.மீ., / 96.35 மி.மீ.,

2026 / 64.61 மி.மீ., / 8.72 மி.மீ., / - / - /

Advertisement