மடப்புரம் கோயில் வழியாக சென்றாலும் பார்க்கிங் கட்டணம்

திருப்புவனம்:மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோயிலுக்கு வருபவர்களிடம் டூவீலர், கார் பார்க்கிங் கட்டணம் வசூலிக்க ஏலம் எடுத்த ஒப்பந்தக்காரர் கோயில் வழியாக செல்பவர்களிடமும் வசூலில் ஈடுபட்டு தகராறு செய்வதாக புகார் எழுந்துள்ளது.

மடப்புரத்தில் பத்திரகாளி அம்மன் கோயில் அமைந்துள்ளது. கோயிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் டூவீலர், ஆட்டோ, கார்,வேன்,பஸ் உள்ளிட்டவற்றில் வந்து செல்கின்றனர். கோயிலுக்கு வாகனங்களில் வருபவர்களிடம் பார்க்கிங் கட்டணம் வசூலிக்க டெண்டர் விடப்பட்டுள்ளது.

தற்போது ஆடி என்பதால் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. எனவே போலீசார் கோயில் பாதையை ஒரு வழிப்பாதையாக மாற்றி அமைத்துள்ளனர். மடப்புரம் கோயிலை கடந்து தேளி, ஏனாதி, கணக்கன்குடி, வெங்கட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு தினசரி விவசாயிகள் டூவீலர், டிராக்டர், கார்களில் சென்று வருகின்றனர்.

போலீசார் கோயில் கோபுரம் அருகே பாதையை ஒரு வழி பாதையாக மாற்றி அமைத்ததால், தேளி,ஏனாதி, கணக்கன்குடி செல்லும் விவசாயிகளும், பொதுமக்களும் கோயில் பார்க்கிங் வழியாக செல்கின்றனர். கோயில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்க டெண்டர் எடுத்தவர்கள் அந்த வழியாக செல்லும் விவசாயிகளிடம் கிராம மக்களிடமும் தினசரி கட்டணம் கேட்டு தகராறு செய்கின்றனர்.

கோயில் நிர்வாகம் ஒப்பந்தகாரர்களிடம் விவசாயிகள், பொது மக்களிடமும் கட்டணம் வசூலிக்க கூடாது என அறிவுறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement