டோட்டலா மக்கராகி கிடக்கும் உடற்பயிற்சி கருவிகள் பரிதாப நிலையில் கடற்கரை சாலை திறந்தவெளி ஜிம் 

புதுச்சேரி கடற்கரை சாலை...

காத்துல உப்புக் காத்தோட சேர்த்து எப்போதுமே ஒரு தனி கெத்து மிதந்துட்டே இருக்கும். காலை, மாலைனு ரெண்டு வேளையும் ஆளாளாளுக்கு ஸ்போர்ட்ஸ் ஷூவை மாட்டிக்கிட்டு, காதுல ஹெட்போனை போட்டுக்கிட்டு வாக்கிங் போறவங்களால இந்த ஏரியா எப்போதுமே அத்தனை பிஸி தான்.

அப்படி வர்ற பொதுமக்கள், சும்மா நடந்துட்டு மட்டும் போகாம கொஞ்சம் வார்ம்- அப், வொர்க்-அவுட் பண்ணிக்கிறதுக்காகவே தலைமைச் செயலகம் எதிரே இருக்குற அந்தப் வரலாற்றுச் சிறப்புமிக்க போர் வீரர்கள் நினைவு சின்னம் பக்கத்துல ஒரு திறந்தவெளி ஜிம்மை அமைச்சிருந்தது புதுச்சேரி நகராட்சி.

ஏர் ஸ்கையர், புல் டவுண் சேலஞ்ச், ஆர்ம் பெடல் பைக்-னு மொத்தம் 9 கெத்தான உடற்பயிற்சி கருவிகள் இங்கே கம்பீரமா அமைக்கப்பட்டு இருக்கிறது. சில்லுனு கடல்காற்றை வாங்கிட்டே, ரிலாக்ஸா உடற்பயிற்சி செஞ்சுட்டுப் போகலாம்னு வர்ற முதியவர்களுக்கும், சிக்ஸ் பேக் கனவோட வர்ற இளைஞர்களுக்கும் இந்த ஸ்பாட் ஒரு நிஜமான வரப்பிரசாதம். ஆனா... இப்போ அங்க இருக்குற நிலவரத்தைப் பார்த்தா  ஐயோனு இரக்கப்படத்தான் தோணுது.

கடற்கரை சாலை ஜிம்முக்கு வழக்கமா வர்ற பிட்னஸ் பிரியர்கள் ரொம்பவே மிஸ் பண்ற முக்கியமான கருவிகள், இப்போ டோட்டலா டேமேஜ் ஆகி இருக்கிறது. அதுதான் அந்த கெத்தான பேரலல் பார் ஜிம் மற்றும் தொப்பையைக் கரைக்கும்  ஹிப் ட்விஸ்டர் மார்புத் தசைகளையும், தோள்பட்டையையும் செமையா வலுப்படுத்தக்கூடிய பவர்புல் கருவி இந்த பேரலல் பார்.

ஆனா, இன்னைக்கு நிலைமை என்ன தெரியுமா.. அது அடியோடு உடைஞ்சு போய், பார்க்கவே ரொம்ப பரிதாபமாக் காட்சி தருது. அங்கே வொர்க்-அவுட் செய்ய வந்த இளைஞர் ஒருத்தர்கிட்ட பேசினப்போ, தன் அதிருப்தியை கொட்டித் தீர்த்தார்...

தினமும் காலைல பீச் ரோட்டுல ஓடிட்டு, இங்க வந்து பேரலல் பார்ல ஒரு 20 டிப்ஸ் அடிச்சாத்தான் அன்னைக்கு நாளே எனக்கு ஸ்டார்ட் ஆகும். செஸ்ட் அண்ட் ஷோல்டருக்கு இதைவிடச் சிறந்த பிரீ எக்சர்சைஸ் வேற எதுவுமே இல்லை. ஆனா, இப்போ இது உடைஞ்சு தொங்குறதைப் பார்க்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு’ என்றார்.

அடுத்ததா, நம்ம ஊர் மக்கள் ரொம்பவே விரும்பி, போட்டி போட்டுக்கிட்டு பயன்படுத்துற  ஹிப் ட்விஸ்டர். உடம்போட மேல் பகுதியை அசையாம வச்சுக்கிட்டு, இடுப்பை மட்டும் லெப்ட் அண்ட் ரைட் சுழற்றி, தொப்பையைக் குறைக்கவும், இடுப்புத் தசைகளை கெத்தா ஷேப் பண்ணவும் எல்லாரும் கியூவுல நிக்கிற மெஷின் இது. ஆனா, இதில இருக்குற அந்த வட்டுகளும் இப்போ சுத்தமா ஜாம் ஆகி, ஒரு இன்ச் கூட நகர மாட்டேங்குது.

அங்கே நடைப்பயிற்சி முடித்துவிட்டு வந்த பெரியவர் ஒருவர் நம்மிடம் பேசியபோது... தம்பி, எங்களை மாதிரி வயசானவங்களுக்கு இடுப்பு வலி வராம இருக்கவும், லைட்டா உடம்பை வளைச்சு நெளிச்சு பயிற்சி செய்யவும் இந்த ட்விஸ்டர் ரொம்பவே ஹெல்ப்புல்லா இருந்துச்சுப்பா. இப்போ என்னடான்னா, அதுல ஏறி நின்னா ஒரு இன்ச் கூட நகர மாட்டேங்குது. சுத்தமா சுழலவே மாட்டேங்குதுப்பா... ஜாம் ஆகி பல நாளாச்சு, ஆனா கண்டுக்கத்தான் ஆள் இல்லை என்று புலம்பி தள்ளினார்.

தினமும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் இந்த ஓபன் ஜிம்மில், மிக அவசியமான உடற்பயிற்சி கருவிகள் பழுதாகிக் கிடப்பது பொதுமக்களுக்கு பெரிய ஏமாற்றமாக இருக்கிறது. புதுச்சேரி நகராட்சி அதிகாரிகளும், அரசு நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு, பழுதான இந்த உடற்பயிற்சி கருவிகளைச் சீரமைத்துத் தரவேண்டும். பீச் ரோட்டிற்கு வரும் மக்களுக்கு இது ஆரோக்கியப் பரிசாக அமையும்.

Advertisement