பரமக்குடி-- ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை பணியால்  விபத்து அபாயம்: எச்சரிக்கை போர்டுகள், தடுப்புகள் அமைக்க வேண்டும்

பரமக்குடி: பரமக்குடி- ராமநாதபுரம் இடையே நான்கு வழிச் சாலை பணிகள் நடக்கும் நிலையில் எச்சரிக்கை போர்டுகள் மற்றும் ரோட்டோர தடுப்புகள், ஒளிரும் ஸ்டிக்கர்கள் இல்லாததால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. மதுரை- பரமக்குடி நான்கு வழிச் சாலை 2018 முதல் பயன்பாட்டில் உள்ளது. தொடர்ந்து பரமக்குடி- ராமநாதபுரம் இருவழிச் சாலையாக இருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் வரை உள்ள 46.7 கி.மீ.,க்கு நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் துவங்கி நடக்கிறது. இதற்காக மத்திய அரசு ரூ.1853 கோடி ஒதுக்கியுள்ளது.

பணிகளை 2028 மே மாதத்திற்குள் முடிக்கும் வகையில் இரண்டு ஆண்டுகளுக்கு காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி பரமக்குடி, சத்திரக்குடி, அச்சுந்தன்வயல், ராமநாதபுரம் வரை நில எடுப்பு நடந்து ரோடு பணிகள் வேகமாக நடக்கிறது. இதன் காரணமாக தற்போது உள்ள இருவழிச் சாலையின் வெவ்வேறு பகுதியில் இரு புறங்களிலும் ரோடு அமைக்கும் நிலை உள்ளது.

இதனால் ராமநாதபுரம்- ராமேஸ்வரம் நோக்கி செல்லும் வாகனங்கள் தடுமாறும் நிலை உள்ளது. ஒவ்வொரு இடத்திலும் பணிகள் நடப்பது குறித்த எச்சரிக்கை பலகைகள், ரோட்டோர தடுப்புகள் மற்றும் ஒளிரும் ஸ்டிக்கர்கள் வைக்க வேண்டும். இதனை செய்யாததால் வளைவான மற்றும் நேர் கோடு பகுதிகளை இரவு மற்றும் பகல் நேரங்களிலும் அறிய முடியாத வகையில் வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகின்றனர்.

இதனால் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, மாவட்டத்தை சேர்ந்த வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே துறை அதிகாரிகள் நான்கு வழிச்சாலை பணி ஒப்பந்ததாரரை உடனடியாக எச்சரிக்கை பலகைகளை நிறுவச் செய்து ஆபத்தில்லா பயணத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement