சிங்கம்புணரியில் அங்கன்வாடி கட்டடம் கேட்டு முற்றுகை

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் அங்கன்வாடி மைய கட்டடம் கேட்டு பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்பேரூராட்சியில் 7வது வார்டு அரணத்தங்குன்று பகுதியில் தனியார் ஓட்டு கட்டடத்தில் அரசு அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. இங்கு 16க்கும் மேற்பட்ட குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றனர். வாடகை கட்டடமாக இருந்தும் பழுது காரணமாக ஆபத்தான சூழல் நிலவுகிறது.

இதனால் அப்பகுதி மக்கள் தங்கள் சொந்த செலவில் பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் தற்காலிகமாக தகர செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். முதலில் அனுமதித்த அதிகாரிகள் சிலர் புகார் தெரிவிப்பதாக கூறி அந்த கட்டுமானத்திற்கு தடை விதித்துள்ளனர்.

ஆத்திரமடைந்த பெற்றோர்கள் அப்பகுதி தி.மு.க., கவுன்சிலர் மீனா தலைமையில் ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மைய அலுவலகம் முன்பாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஓரிரு நாளில் நடவடிக்கை எடுப்பதாக அங்கிருந்த அலுவலர்கள் தெரிவித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Advertisement