கரூர் சிலவரி செய்திகள்

தமிழ்நாடு அரசு ஊழியர்
சங்க கிளை மாநாடு
கரூர்: அரவக்குறிச்சியில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கிளை மாநாடு நடந்தது.
வட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கத்துரை தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் தனலட்சுமி புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்தார். கரூரிருந்து, மதுரை செல்லும் பஸ்கள் அரவக்குறிச்சி, புங்கம்பாடி பைபை பாஸ் சாலை ஆகிய இடங்களில் நின்று செல்வதில்லை. பஸ்கள் இங்கு நிற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முருங்கைக்காய் பவுடர் தொழிற்சாலை அமைத்து தர வேண்டும். அரவக்குறிச்சி மைய பகுதியான ஏ.வி.எம் கார்னர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், ரவுண்டானா அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாநில துணைத்தலைவர் விஜயகுமார், மாவட்ட செயலர் கலா, கிருஷ்ணாராயபுரம் வட்டக்கிளை தலைவர் கிருஷ்ணவேணி, வட்ட பொருளாளர் ஆரோக்கிய மேரி, கிளை செயலாளர் வெங்கடேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

கத்திரிக்காய் சாகுபடி பணி
விவசாயிகள் மும்முரம்
கிருஷ்ணராயபுரம்: வீரியபாளையம் பகுதியில், கத்திரிக்காய் சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வீரியபாளையம், குரும்பப்பட்டி, கொமட்டேரி பகுதிகளில் காய்கறி சாகுபடி செய்துள்ளனர். கிணற்று நீர் பாசன முறையில், தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. தற்போது கத்திரிக்காய் செடிகளில் உள்ள காய்கள் பறிக்கப்பட்டு, மண்டிகளுக்கு கொண்டு சென்று விற்பனை நடக்கிறது. கத்திரிக்காய் கிலோ, 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.தற்போது சீசனாக இருப்பதால், விவசாயிகளுக்கு ஓரளவு வருமானம் கிடைக்கிறது.
குறைந்த பாசன நீரே போதுமானதாக இருப்பதால், கத்திரிக்காய் சாகுபடி பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

மரக்கன்று பராமரிப்பு பணியில்
100 நாள் தொழிலாளர்கள்
கிருஷ்ணராயபுரம்: கொம்பாடிப்பட்டி சாலையில், மரக்கன்றுகளை பராமரிக்கும் பணி நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம் பஞ்சாயத்து கொம்பாடிப்பட்டி, வல்லம் ஆகிய சாலையோர இடங்களில், பஞ்சாயத்து சார்பில் வேம்பு, புங்கன், புளியன் ஆகிய மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மேலும் முள் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.
அதிகமான வெயில் அடிப்பதால் மரக்கன்றுகளை பாதுகாக்கும் வகையில், பஞ்சாயத்தில் உள்ள 100 நாள் திட்ட தொழிலாளர்களை கொண்டு தண்ணீர் ஊற்றும் பணி நடந்தது. இப்பகுதியில், 300க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

கிருஷ்ணராயபுரம் பகுதியில்
100 கவுளி வெற்றிலை ரூ.4,000
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, வீரவள்ளி, சிந்தலவாடி, கருப்பத்துார், கள்ளப்பள்ளி, திருக்காம்புலியூர், பிச்சம்பட்டி, கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் வெற்றிலை சாகுபடி செய்துள்ளனர். வெற்றிலைகளை பறித்து லாலாப்பேட்டை கமிஷன் மண்டிகளில், மொத்தமாக விற்பனை செய்யப்
படுகிறது.
தற்போது ஆடி மாதம் என்பதால் முகூர்த்த சீசன் குறைந்துள்ளது. இதனால் வெற்றிலை விற்பனை பெரிய அளவில் நடக்கவில்லை. 100 வெற்றிலை கொண்ட ஒரு கவுளி, 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 100 கவுளி கொண்ட வெற்றிலை மூட்டை, 4,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்
படுகிறது.
விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்து கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை
செய்கின்றனர்.

Advertisement