கொரியர் நிறுவனங்களுக்கு போலீசார் எச்சரிக்கை
கோவை: கொரியர், பார்சல், லாஜிஸ்டிக்ஸ் நிறுவன பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் எஸ்.பி.,பவன்குமார் தலைமையில் நடந்தது.
கஞ்சா, மெத்தாம்பெட்டமைன், தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கொரியர் மூலம் கடத்தப்படுவதை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பார்சல்களை ஏற்கும் முன் அனுப்புநரின் அடையாளம் மற்றும் முகவரி விவரங்களை கட்டாயம் சரிபார்க்க வேண்டும், முழுமையற்ற முகவரி, தவறான மொபைல் எண், அடையாளம் தெரியாத நபர்கள் அல்லது கல்லுாரி மாணவர்கள் பெயரில் அடிக்கடி அனுப்பப்படும் பார்சல்களை கூடுதல் கவனத்துடன் ஆய்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
போதைப்பொருள் கடத்தலுக்கு துணைபுரிவது, சந்தேகத்திற்கிடமான பார்சல்கள் குறித்து தகவல் மறைப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும் நிறுவனங்கள் மற்றும் ஊழியர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, எஸ்.பி., பவன்குமார் எச்சரித்தார்.