'கொளத்துார் தொகுதி ஓட்டுப்பதிவில் குளறுபடி இல்லை'

சென்னை: ''மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி நிறைவடைந்ததைதொடர்ந்து, கொளத்துார் தொகுதி ஓட்டுப்பதிவில் எந்த குளறுபடியும் ஏற்படவில்லை,'' என, மாவட்ட தேர்தல் அதிகாரியும், சென்னை மாநகராட்சி கமிஷனருமான சமீரன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

கடந்த சட்டசபை தேர்தலில் கொளத்துார் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஸ்டாலின், த.வெ.க., வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் 8,795 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். ஓட்டு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக ஸ்டாலின் தரப்பில், தேர்தல் கமிஷனில் புகார் அளிக்கப்பட்டது.

தேர்தல் கமிஷன் உத்தரவின்படி, கொளத்துார் தொகுதியில் உள்ள 14 ஓட்டுச்சாவடிகளின் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு கிடங்கில் கடந்த ஜூலை 29ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 4 ல் நிறைவடைந்தது.

மாவட்ட தேர்தல் அதிகாரி, வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் தினமும் காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை ஆய்வு நடைபெற்றது. மொத்தம் 14 இயந்திரங்களின் செயல்பாடுகள் சரிபார்க்கப்பட்ட நிலையில், அதற்கான சான்றிதழ்கள் தேர்தல் கமிஷனிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. ஓட்டு எண்ணிக்கையில் எந்த குளறுபடியும் ஏற்படவில்லை. இவ்வாறு தேர்தல் அதிகாரி சமீரன் கூறினார்.

Advertisement