வீடு புகுந்து 8 பவுன் தங்க நகை வெள்ளி பொருட்கள் கொள்ளை

கீழக்கரை: கீழக்கரை அருகே புல்லந்தையில் வீட்டின் பீரோவை உடைத்து நகையை கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடுகின்றனர்.

புல்லந்தை வடக்கு தெருவை சேர்ந்தவர் நர்மதா 26. இவர் கீழக்கரையில் உள்ள ஏஜென்சியில் கணக்காளராக வேலை செய்கிறார். கடந்த இரண்டு மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு நர்மதா வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டார்.

மதியம் 2:30 மணிக்கு வீட்டிற்கு வந்த போது வீட்டின் வெளிக் கதவு பூட்டப்பட்டு இருந்தது. சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 8 பவுன் தங்க நகைகள், 10 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி கொலுசு மற்றும் பணம் ரூ.2000 ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். வீட்டின் சாவியை கதவுக்கு மேல் வைத்த நிலையில் நோட்டமிட்ட யாரோ திருடியுள்ளனர். ஏர்வாடி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement