இருதரப்பினர் மோதல் இரண்டு பெண்கள் காயம்

நெல்லிக்குப்பம், ஆக. 5– கரும காரியம் செய்யும் இடம் பிரச்னை தொடர்பாக இருதரப்பினர் மோதிக் கொண்டதில் 2 பெண்கள் காயமடைந்தனர்.

நெல்லிக்குப்பம் அடுத்த வரக்கால்பட்டு ஊராட்சியில் உள்ள வீரபத்திர ஐயனார் கோவிலுக்கு சொந்தமான இடம் கடலுார்– பண்ருட்டி சாலையை ஒட்டி உள்ளது. கடந்த 100 ஆண்டுகளாக இறந்தவர்களின் கரும காரியத்தை அந்த இடத்தில் செய்து வந்தனர். அந்த இடத்தை சுற்றி பலர் வீடுகள் கட்டியுள்ளனர். இதனால் கோவில் இடத்தில் கரும காரியம் செய்ய வீட்டின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக சாலையின் மறுபுறம் உள்ள குளத்தின் அருகே கட்டப்பட்ட கொட்டகையில் காரியம் செய்ய துவங்கினர்.

இந்நிலையில் செல்வம் என்பவரின் தாய் பழனியம்மாள் இறந்ததற்கான காரியத்தை கோவில் இடத்தில் செய்ய செல்வமும், அவரது உறவினர்களும் வந்தனர். இதையறிந்த வீட்டின் உரிமையாளர்கள் காரியம் செய்ய வந்தவர்களை தடுக்கவே, இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர். அதில் காயமடைந்த எழிலரசி,38; சந்திரவாணி,46; ஆகியோர் கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். போலீசார் 3 மணி நேரம் பேசியும் சமாதானம் ஆகாததால், இறுதியாக இந்த முறை மட்டும் கோவில் இடத்தில் காரியம் செய்து கொள்ளுங்கள். தாசில்தார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என போலீசார் கூறினர்.அதை தொடர்ந்து கோவில் இடத்தில் காரியம் நடந்தது. இதனால் அங்கு பதட்டம் நிலவியது.

Advertisement