கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைத்திருந்த 20 ஆயிரம் நெல் மூட்டைகள் திடீர் மழையால் சேதம்

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைத்திருந்த நெல் மூட்டைகள், திடீர் மழையில் நனைந்து வீணானது.

நெல்லிக்குப்பத்தில் திருக்கண்டேஷ்வரம் உள்ளிட்ட மூன்று இடங்களில், தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு தனியாரை விட அதிக விலைக்கு நெல் கொள்முதல் செய்வதால், விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் நெல்லை விற்க, நேரடி கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வருகின்றனர்.

மூன்று இடங்களிலும் கொள்முதல் செய்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் திறந்த வெளியில் அடுக்கி வைத்துள்ளனர். இதை சேமிப்பு கிடங்குக்கு எடுத்து செல்லாமல் 2 மாதமாக தேங்கியுள்ளது. தார்பாய் மூலம் மூடியிருந்தாலும் அதில் ஓட்டைகள் இருப்பதாலும், காற்றில் பறப்பதாலும் மழையில் நனைந்து வீணாகும் சூழல் இருந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென மழை கொட்டியது. ஒரு மணி நேரத்தில் 3 செ.மீ., மழை பெய்ததில், கொள்முதல் நிலையங்களில் வைத்திருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதமானது. கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை குடோன்களுக்கு எடுத்து செல்ல வேண்டும் என விவசாயிகள் கோரியுள்ளனர்.

நனைந்த மூட்டைகளுக்கும், பல மாதங்களாக தேங்கியிருந்ததால் வீணான மூட்டைக்கும் நாங்கள் நஷ்டஈடு கட்ட வேண்டும். அரசின் தவறால் நாங்கள் பாதிக்கிறோம் என ஊழியர்கள் புலம்புகின்றனர்.

Advertisement