'கல்குவாரிகள் கைகொடுக்கும் குடிநீர் பற்றாக்குறை வராது'
''சிக்கராயபுரம், எருமையூர் கல்குவாரிகளில் போதிய தண்ணீர் இருப்பு உள்ளதால், சென்னையில் குடிநீர் தேவையை பற்றாக்குறையின்றி வினியோகிக்க முடியும்,'' என, சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் ஆனந்த் கூறினார்.
காஞ்சிபுரம் மாவட்டம், சிக்கராயபுரம் மற்றும் எருமையூரில் உள்ள 30க்கும் மேற்பட்ட கல்குவாரிகளில் உள்ள நீர், சென்னைக்கு குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது.
இந்த கல்குவாரிகள் மற்றும் செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய செயல்பாடுகளை நேற்று, சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் ஆனந்த் பார்வையிட்டார்.
ஆனந்த் கூறியதாவது:
செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து அம்பத்துார், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்துார், அடையாறு ஆகிய மண்டலங்கள் மற்றும் தாம்பரம், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்படுகின்றன.
சிக்கராயபுரம் கல்குவாரிகளின் மொத்தம், 0.50 டி.எம்.சி., தண்ணீர் தேக்க முடியும். இதில், 0.35 டி.எம்.சி., தண்ணீர் இருப்பு உள்ளதால், தினமும் 3 கோடி லிட்டர் வீதம், 354 நாட்கள் வரை தண்ணீர் எடுக்க முடியும்.
அதேபோல், எருமையூர் கல்குவாரிகள் மொத்தம், 0.20 டி.எம்.சி.,யில், 0.15 டி.எம்.சி., தண்ணீர் உள்ளது. தினமும் 1 கோடி லிட்டர் வீதம், 425 நாட்கள் வரை தண்ணீர் எடுக்க முடியும்.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருப்பு குறையும்போது, கல்குவாரிகளில் இருந்து அதிக அளவு தண்ணீர் எடுத்து சுத்திகரிக்கப்படும். இதன்வாயிலாக, சென்னையின் குடிநீர் தேவையை பற்றாக்குறை இல்லாமல் வினியோகிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.