ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்க வாய்ப்பு; கச்சா எண்ணெய் விலை சரிவு

12



நமது நிருபர்




ஈரானுடன் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது தொடர்பான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என மூத்த அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்த நிலையில், கச்சா எண்ணெய் விலை மூன்று வாரங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது.

சர்வதேச போர் பதற்றம் மற்றும் கச்சா எண்ணெய் வினியோகத்தில் தடை ஏற்படுமோ என்ற அச்சம் தணியாததால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. குறிப்பாக, அமெரிக்கா - ஈரான் போர் முழு வீச்சில் மீண்டும் துவங்கியதை தொடர்ந்து, உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகம் மற்றும் சர்வதேச வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையிலான மோதலைத் தணிப்பதற்காக சமீப மாதங்களில் நடந்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் நிதித்துறை அமைச்சர் ஸ்காட் பெசென்ட் ஆகிய இருவரும், ஈரானுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் அணுஆயுத ஒழிப்பு மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி ஆகிய இரு முக்கிய விஷயங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் அடைந்துள்ளதாக அறிவித்தனர்.

ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கான ஒப்பந்தம் சில தினங்களில் மேற்கொள்ளப்படலாம் என்றும் அவர்கள் தெரிவிததனர். இதன் எதிரொலியாக, உலகளாவிய எண்ணெய் விலை அளவுகோலான ஒரு பீப்பாய் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை கிட்டத்தட்ட 5% சரிந்து, 80 டாலருக்கும் கீழ் குறைந்தது. கச்சா எண்ணெய் விலை டபிள்யூ.டி.ஐ (WTI) பேரலுக்கு 5%க்கும் மேல் சரிந்து, 76 டாலராகக் குறைந்தது. கடந்த 3 வாரங்களில் இல்லாத வகையில் குறைந்துள்ளது.

Advertisement