டில்லி போராட்டம் குறித்து திட்டமிட்டு வதந்தி பரப்பிய இன்புளுயன்சர்கள், யூடியூபர்கள்; விசாரணையில் அம்பலம்

20



நமது டில்லி நிருபர்




டில்லி போராட்டங்கள் குறித்து சமூக வலைதளங்களில் வதந்திகள் மற்றும் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலியான வீடியோக்களைப் பரப்பியதாக 200க்கும் மேற்பட்ட இன்புளுயன்சர்கள், யூடியூபர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, டில்லி ஜந்தர் மந்தரில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினர். 20 நாட்களுக்கு மேலாக நடந்த போராட்டத்தில், ஜூலை 20ம் தேதி வன்முறை வெடித்தது.

போராட்டத்தில் கலந்து கொண்ட சமூக விரோதிகள் நடத்திய தாக்குதலில், போலீசார், துணை ராணுவப்படையினர் என 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதன் பிறகே, இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு தரப்பினரின் மர்மமான பின்னணி பற்றிய தகவல்கள் வெளியாகத் தொடங்கின.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில், 2,500க்கும் மேற்பட்டோர் குற்றப்பின்னணி கொண்டவர்கள். வன்முறையில் ஈடுபட்ட 989 பேரில் 101 பேர் கொலைக் குற்றவாளிகள் என்பது தெரியவந்தது. தற்போது போராட்டங்கள் குறித்து சமூக வலைதளங்களில் வதந்திகள் மற்றும் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலியான வீடியோக்களைப் பரப்பியதாக 200க்கும் மேற்பட்ட இன்புளுயன்சர்கள், யூடியூபர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து இயங்கும் கணக்குகள் உள்பட பல சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

இது குறித்து டில்லி போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: எங்கள் விசாரணையில், சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட பல வீடியோக்கள் எதிர்மறையான ஒரு பொய்களை பரப்பும் வகையில் சித்தரிக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது. போராட்டங்களின் போது, ​​பல இணைய தளங்களில் சர்ச்சைக்குரிய வீடியோக்கள், ரீல்களைத் திட்டமிட்டுப் பரப்புவதற்காக ஏராளமான போலி சமூக ஊடக கணக்குகள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

இது வேண்டுமென்றே பரப்பப்பட்டதா என்பதை கண்டறிய, சர்வர்கள் மற்றும் டிஜிட்டல் செயல்பாடுகளை ஆய்வு செய்து வருகிறோம். வன்முறையின் போது காயமடைந்தவர்களின் வாக்குமூலங்கள் பெறவும் போலீசார் முனைப்பு காட்டி வருகின்றனர். இது விசாரணைக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement