கட்கரிக்கு எதிரான அவதூறு பதிவுகள்; உடனடியாக நீக்க மும்பை ஐகோர்ட் உத்தரவு

மும்பை: இ20 பெட்ரோல் விவகாரத்தில் மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு எதிராக சமூகவலைதளப் பக்கங்களில் பதிவிடப்பட்ட பதிவுகளை உடனடியாக நீக்க மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இ20 பெட்ரோல் விவகாரத்தில் மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு எதிராக சமூக வலைதளங்களில் தீய பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக, ஏஐ முறையில் உருவாக்கப்பட்ட வீடியோவை சிலர் டிரெண்டாக்கி வருகின்றனர். மேலும், கட்கரி குறித்து அவதூறு பரப்பும் விதமாக கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

இதை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி அரிப் டாக்டர் அடங்கிய தனிநீதிபதி அமர்வு, மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு எதிராக சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட அவதூறு பரப்பும் பதிவுகளை நீக்குமாறு மெட்டா, எக்ஸ் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது.

இந்தப் பதிவுகள் மிகவும் கீழ்த்தரமானவை எனக் குறிப்பிட்ட நீதிமன்றம், எதிர்காலத்தில் தீய நோக்கத்திற்காக ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட ஏஐ வீடியோக்கள் மற்றும் அவதூறு கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டால், அதனை நீக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களை அமைச்சர் நேரடியாக அணுகலாம் என்றும், நிறுவனங்கள் அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

Advertisement