பெருந்திட்ட வளாக பூங்காவின் எதிர்புறம் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படுமா?

விழுப்புரம்: விழுப்புரம் பெருந்திட்ட வளாக பூங்காவின் எதிர்புறம்,  வாகனங்கள் நிறுத்துமிடம் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில், 7 ஏக்கர் பரப்பளவில்,  நகராட்சி சார்பில் நவீன பூங்கா உள்ளது. பொதுமக்கள் நடைபயிற்சி பாதை, சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கிரிக்கெட் பயிற்சி மைதானம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

நுாற்றுக்கணக்கானோர் தினமும் காலை, மாலை என இரு வேளைகளிலும் பூங்காவிற்கு வந்து செல்கின்றனர். பூங்காவின் எதிர்புறம், எலக்ட்ரானிக் ஓட்டுப் பதிவு எந்திரங்கள் வைப்பதற்கான குடோன் அருகே, இரு சக்கர வாகனங்கள் நிறுத்த இடம் ஏற்பாடு செய்யப்பட்டது.

நாளடைவில் அப்பகுதியில் புதர்கள் மண்டியதுடன், சாலை பணியின் போது எடுக்கப்பட்ட மண் குவியல் கொட்டப்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன், அப்பகுதியில் இருந்த மண் குவியல், புதர்கள் அகற்றப்பட்டன. இங்கு, இரு சக்கர வாகனங்கள் நிறுவதற்கு உரிய பணிகளை மேற்கொள்ள பொதுப்பணித் துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக, வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமைகளில், கலெக்டர் அலுவலக பிரதான சாலையில், பூங்காவின் முன்புறம் வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்த்திட, கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement