ஏர்போர்ட் விரிவாக்கத்தில் அணுகுசாலை 415 மீட்டர் நிலம் கையகப்படுத்த தயக்கம்
கோவை: ஏர்போர்ட் விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்திய பகுதியில் வசிப்போர் பயன்படுத்த 10.5 மீட்டர் அகல அணுகுசாலை அமைக்க கோருகின்றனர். பாதுகாப்பு காரணங்களை சொல்லி, 4 மீட்டரே ஒதுக்கப்படும் என ஆணையம் கூறியது. இப்போது, அவிநாசி ரோட்டில் இருந்து அமையும் வழித்தடத்தில் 200 அடி ரோடு உருவாக்க ஒத்துக் கொண்டது.
அதேநேரம், சுற்றுச்சுவரை ஒட்டிய இன்னொரு பகுதியில் 8 நில உரிமையாளர்கள் இருகூர் ரோடு செல்வதற்கு அணுகுசாலையே இல்லை; 80 ஏக்கர் நிலங்களுக்கு வழித்தடம் இல்லை. சென்னை ஐகோர்ட்டில் நடந்த விசாரணையில், கலெக்டர் தலைமையில் கூட்டம் நடத்தி, மனுதாரர்கள் விமான நிலைய ஆணையத்தினர் பேசி, சுமூகத் தீர்வு ஏற்படுத்த அறிவுறுத்தியது.
கலெக்டர் அலுவலகத்தில் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஏற்கனவே சொன்னதையே ஆணையத்தினர் திரும்பத் திரும்ப கூறியிருக்கின்றனர். 10.5 மீட்டர் அகல சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் முன்வராததால், நில உரிமையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இவ்வழக்கு சமீபத்தில் ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. நில உரிமையாளர்கள் பங்கேற்றனர். மாவட்ட நிர்வாகம், ஆணையம் தரப்பில் வராததால், 17க்கு ஒத்திவைக்கப்பட்டது.
பாதிக்கப்படும் நில உரிமையாளர்கள் கூறியதாவது:
விமான நிலையத்தைச் சுற்றி ரோந்து செல்லும் வாகனங்களுக்கு அமைக்கும் 4 மீட்டர் ரோட்டை, நாங்களும் பயன்படுத்திக் கொள்ள ஆணையம் அறிவுறுத்துகிறது. கூடுதலாக 6.5 மீட்டர் ரோடு அமைத்துக் கொடுப்பது மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்பு என கூறி நழுவுகிறது. ஆணையம் சொல்லும் 4 மீட்டர் சாலையையே பயன்படுத்திக் கொள்ள கலெக்டரும் கூறுகிறார். 200 அடி ரோடு அமையும் பகுதியில் அணுகுசாலைக்கு 10.5 மீட்டர் ஒதுக்கும்போது, எங்கள் பகுதிக்கு மட்டும் தரத் தயங்குவது ஏன்.
கூடுதலாக 415 மீட்டர் நிலம் கையகப்படுத்தினால், இருகூர் ரோட்டில் இணைய, வழித்தடம் கிடைக்கும். நிலம் தரத்தயாராக இருக்கிறோம். நிலத்தின் ஒரு பகுதியை ஏர்போர்ட் விரிவாக்கத்துக்கு தந்து விட்டோம்; மீதமுள்ள இடத்தை பயன்படுத்த வழித்தடம் தேவை. அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று நிலம் கையகப்படுத்தி, சாலை வசதி செய்து தர வேண்டும்.
ஆணையத்தின் தொழில்நுட்ப குழு நேரில் ஆய்வு செய்து, பாதுகாப்பு காரணங்களுக்கு எவ்வளவு இடம் ஒதுக்க வேண்டும் என்கிற அறிக்கை கொடுத்த பிறகே இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமென அதிகாரிகள் கூறுகின்றனர்.
இவ்வாறு, தெரிவித்தனர்.
மேலும்
-
'பாராட்டு மழையால் பதவி?'
-
'கைதட்டல் கடுப்பை கிளப்புதோ?'
-
பேச்சு, பேட்டி, அறிக்கை
-
'தினமலர்' நாளிதழ் பாதையில் பயணம்!
-
தலைமைச் செயலகம் அருகே இடைத்தரகர்கள் தொல்லை
-
பகிங்ஹாமில் படகு பயணம்!: எண்ணுார் - மாமல்லபுரம் இடையே புது திட்டம்; 'டெண்டர்' கோரியது மெட்ரோ ரயில் நிறுவனம் : சென்னையின் அடையாளமாக மாறப்போகுதாம்!